வாங்க. நீங்கதான் SBல இருந்து வரேள் இல்லையா என்று அவன் பெயரைச் சொல்லி, வெல் கம் டு ப்ரிவெண்ட்டிவ், நான் ஹேமலதா, ஸ்டெனோ என்று கூறி நட்புடன் சிரித்தது ஒரு ஜிமிக்கி.
இரண்டு ஜிமிக்கிகளும் ஆடவேண்டும் என்பதற்காகவே அது தலையை ஆட்டி ஆட்டி பேசிக்கொண்டிருந்ததோ என்று சந்தேகப்படுமளவிற்கு, பேசாமல் சும்மா இருக்கும்போது கூட தலையை வெட்டிக்கொண்டிருந்தது. வெட்கமாகக் கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும் பரவாயில்லை சின்னப் பெண். வயசு காரணமாகவே நன்றாக இருந்தது. அதுவும் தமிழ் தெரிந்த சிறுமி. அம்பாலே போல ஆங்கிலம் பேசி, அதையும் புரியாதபடிப் பேசி அவஸ்தைப் படுத்தாது. பச்சையப்பாஸில் பீஜி படித்த பெண்களைப் போல எளிதாய் நட்பாக்கிக்கொண்டு கொஞ்சம் சுவாரசியமாய் இருக்கலாம்.
பழைய படபடப்பு போன இடம் தெரியவில்லை.
நடுநாயகமாக - சுவரிலிருந்து சற்று முன்னே தள்ளிப் போடப்பட்டிருந்த சேரில் உம்மென்று உட்கார்ந்து, முழங்கை முட்டியை வைப்பதற்காகவே டேபிள் இருக்கிறது என்பதைப் போல், ஒரு ஃபைலும் இல்லாமல் சுத்தமாகத் துடைக்கப்பட்டிருந்த டேபிளில், நெட்டுக் குத்தாய் வைக்கப்பட்டிருந்த இடக்கையின் அடிப்புறத்தை வலக்கையால் தடவித்தடவியே அடைபோல கருப்பாக்கி வைத்துக்கொண்டிருந்ததைத் தடவிக்கொண்டு இருந்தவரைக் காட்டி, சார் தான் ஆபீஸ் சூப்பிரண்டெண்ட். அவர்கிட்ட உங்க ஆர்டரைக் குடுங்க என்றது ஜிமிக்கி.