ஹேமலதா விதிர்விதிர்த்துப் போயிருந்தாள். அவளது ஜிமிக்கி ஆடாமல் அசையாமல் இருந்தது.
அவனுக்கு ஆத்திரமாக வந்தது. சிவசுப்பிரமணியனைத் தெரியவந்தே இன்னும் முழுசாக அரைமணி நேரம் கூட ஆகியிருக்கவில்லை. ஆனால் அவன் அப்படித்தான். எதற்காக யாருக்காக என்று எந்த யோசனையும் இல்லாமல் தலையை கில்லட்டினில் கொடுப்பதற்கென்றே பிறவியெடுத்திருப்பவன் போல இருந்துகொண்டிருப்பதே அவன் இயல்பாகிப் போயிருந்தது.
தீந்துப் போச்சி. கல்ல வாங்கு கல்ல வாங்கு என்றபடி பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் இருந்து காம்ப்பவுண்டு சுவரைத் தாண்டி வெளியே கல் வீசிக் கொண்டிருந்த பையன்கள் பின்வாங்கிக்கொண்டு இருந்தார்கள்.
ஒரு பையனின் தலையில் அடிபட்டுவிட, அவன் சட்டையையே கழற்றி தலையை அழுத்தியபடி இரண்டு மூன்று பையன்களாகச் சேர்ந்து அவனை ஹாஸ்டலுக்குத் தூக்கிக்கொண்டு போனார்கள்.
ஒரு பையன், காய்ந்த இலை தழைக் குப்பைகளைக் கூட்டிப் பெருக்கிப் போட்டுத் தள்ளிக்கொண்டு போகவென்று இருக்கிற, சக்கரம் வைத்த இரும்புத் தொட்டியை, கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு, கல்லூரியின் பின்புறமிருக்கும் தண்டவாளத்தை நோக்கிக் கல் போட்டுக் கொண்டுவர, பேய் வேகத்தில் போய்க்கொண்டு இருந்தான்.