அவன் பெயரைச் சொல்லி கையெழுத்துப் போடச்சொன்னால்தான் சாரி என்று சொல்லிவிட்டுப் போடுவான். என்னை மதி நான் உன்னை மதிக்கிறேன் என்பது அவன் கொள்கை. ஆனால் அந்த அரசு அலுவலகத்திலோ உனக்கு மரியாதை கிடைக்கிறதோ இல்லையோ சம்பளம் கிடைக்கிறது இல்லையா, அதற்காக அதிகாரத்தை மதி; அதற்கு நன்றியோடு இரு; பென்ஷனும் கிடைப்பதால் சாகும் வரை அடிமையாய் இரு என்பதே, எழுதப்படாத சாசனமாக இருந்தது. குறைந்தது, அவனுக்கு அப்படித் தொன்றியது.
செய்கிற வேலைக்குதானே சம்பளம். அப்புறம் எதற்கு நன்றியோடு இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் - குறிப்பாக மேலே இருப்பவர்கள். அரசுக்கு உண்மையாக இருப்பேன் என்றுதானே உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். நன்றியோடு இருப்பேன் என்றா எடுத்துக்கொண்டோம். கூலிக்கு வேலை; வேலைக்குக் கூலி. அத்தோடு முடிந்தது உறவு. இது என்ன பண்ணைவேலையா படியளக்கிற ஆண்டைக்குப் பரம்பரை பரம்பரையாய் நன்னி விசுவாசத்தோடு இருக்க. இதில் பெரிய நகைச்சுவை என்னவென்றால், இந்த நன்றி விஸ்வாச விஷயத்தை அரசு எதிர்பார்த்தால் கூடப் பரவாயில்லை. ஆனால் கீழே இருப்பவனுக்கு சம்பளத்தை ஏதோ தன் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுப்பதைப் போல் மேலே இருக்கும் அதிகாரிகள் எதிர்பார்த்தார்கள் என்பதுதான். இந்த அகங்காரமே ‘ஏய்’யாக வெளிப்படுகிறது.