துரும்பளவு முயற்சியுமின்றி, சும்மா பார்த்தால் போதும் என்கிற மாதிரியான எக்கச்சக்க அக்கப்போர்கள், இலவசமாகவேறு கிடைப்பதால், படிக்கிற பழக்கமே ஒரேயடியாய் போய்விடும்போல இருக்கிறது. இந்த லட்சணத்தில், பரவலாகிற எதுவும் பாழாய்ப்போகும் என்கிற பொதுவிதிக்கு முதன்மை எடுத்துக்காட்டாக, எழுதப்படுவதெல்லாம் இலக்கியம்; புத்தகமானதெல்லாம் மேலானது; நிறைய விற்பதே சிறந்தது; எழுதுகிறவனெல்லாம் - எழுதவே தெரியாமல் தப்பும் தவறுமாய் வெந்ததும் வேகாததுமாய் புத்தகச் சந்தையை மட்டுமே குறிவைத்து எழுதுகிறவனாக இருந்தாலும் எழுதுபவன் என்பதாலேயே அவனும் எழுத்தாளன்தான் என்கிற மூடத்தனத்தை விசாரனையேயின்றி ஏற்றுக்கொள்ள வட்டங்களையும் குழுமங்களையும் உருவாக்கிக்கொண்டு வழிபாட்டுத்தலங்கள் பெருகிவிட்ட அவலமான காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகள் சொற்பமாக விற்பதில் பெரிய வியப்பில்லை.