பிறக்கையில் குழந்தை கடவுளாகத்தான் இருக்கிறது. அறிவு வளர்ந்து நாலும் தெரியவந்து வாழ்வில் முன்னேறுவது மட்டுமே முக்கியமாகிப்போக, அநேகமாய் எல்லோருமே கிட்டத்தட்ட சாத்தானாகிவிடுகிறோம். வயது முதிர, இனி போக இடமில்லை எனும்போது கழுவாய் போல கடவுளை நெருங்கிவிடுகிற நப்பாசையில் மதத்திடம் தஞ்சமடைந்துவிடுகிறோம்.
கடவுள், இருக்கிறாரா இல்லையா என்பதல்ல, நீ எப்படி இருக்கிறாய் என்பதைக் கொஞ்சம் யோசித்துபார் என்கிறது இந்தக் கதை. அவர் உன்னிடத்தில்தான் இருக்கிறார். அவராக இருந்த உன்னை, வாழ்க்கை எப்படி நீயாக மாற்றிவிடுகிறது பார்த்தாயா என்று நம்மை விசாரிக்கிறது.