16 February 2023

அன்பை வாங்குதல்

நானும் ஒருகாலத்தில் புத்தகம் வாங்கியிருக்கிறேன். ஆனால், யாரிடமும் ஆட்டோகிராஃப் வாங்கியதில்லை. அசோகமித்திரன் கி. ராஜநாராயணன் பிரபஞ்சன் என்று கொடுத்த புத்தகங்கள் கையெழுத்தோடு இருக்கின்றன. அவற்றில் இருப்பவை கேட்டுவாங்கியவையல்ல. பிரியத்துடன் அவர்களாகப் போட்டுக்கொடுத்தவை. 

அசோகமித்திரனின் முதல் சிறுகதைத் தொகுப்பான வாழ்விலே ஒரு முறை, பெஸண்ட்நகர் CPWD குவார்டர்ஸில் கீழ்வீட்டில் இருந்த ஆதிமூலத்திடமிருந்து, 1981ல் படிக்க வாங்கியது, என்னிடமே தங்கிவிட்டது. அமி அதை 1971ல் ஆதிக்குக் கையொப்பமிட்டுக் கொடுத்திருக்கிறார்.


இரண்டாவது தொகுப்பான இன்னும் சில நாட்களை, 1.4.1981 என தேதியுடன் கையொப்பமிட்டுக் கொடுத்தார்.   

வாழ்விலே ஒரு முறையில் இருந்த கதைகளைப் படித்துவிட்டு அவரிடம் போய் உட்கார்ந்து, எப்படி எப்படியெல்லாம் எழுதியிருக்கிறார் என்று, கதை கதையாய் பொங்கிப் பொங்கிப் பேசிக்கொண்டிருந்தது காரணமாக இருக்கலாம்.  


1984ல் எழுத்தாளர்கள் நண்பர்கள் ஆபீஸ்காரர்கள் என்று பலரிடமும் பணம் திரட்டி, கட்டுரையைப் புத்தகமாகக் கொண்டுவந்ததற்காக தருமு சிவராமு, பிரமிள் என்று கையெழுத்திட்டுக் கொடுத்தது இது. 

இதில் அன்புடன் என்று இல்லை என்பதால் அன்பில்லை என்று ஆகிவிடுமா.  


புத்தகங்களில் ஆசிரியர்கள் கையெழுத்திட்டுக் கொடுப்பதென்பது, அன்புமீதூர்ந்து தாமாக முன்வந்து செய்கிற அபூர்வ காரியமாகத்தான் ஒருகாலத்தில் இருந்தது. சுந்தர ராமசாமியின் புத்தகங்களைத் தேடித்தேடி வாங்கியவன். ஆனாலும் அவரிடம் ஒன்றில் கூட கையெழுத்து வாங்கியதில்லை. அவர் நாகர்கோவிலில் இருந்தார். நான் இருந்தது மெட்ராஸ் என்பதல்ல காரணம். ராமசாமி மெட்ராஸ் வந்திருக்கிறார் என்றால் அவரைத் துரத்தித் துரத்திப் பார்த்துக்கொண்டிருந்த, ஜோல்னா பையில் புத்தகங்களுடனேயே திரிந்துகொண்டிருந்த காலம். எப்போது வேண்டுமானாலும் எடுத்து நீட்டி வாங்கியிருக்கலாம். வாங்கவேண்டும் என்று தோன்றக்கூட இல்லை. ஏனெனில், கையெழுத்தைத் தாண்டிய காதல் அது.

எழுத்தென்பதே பணம் என்று ஆகிவிட்ட காலத்தில், தள்ளுபடி விற்பனை மேளாக்களில் இவ்வளவு விற்றது இவ்வளவு கையெழுத்துக்கள் போடப்பட்டன என்று வாங்குவதும் விற்பதும் வணிகம் என்பது போய் அனைத்தும் அன்பின் வெளிப்பாடாகக் காட்டப்படுகிறது அல்லது கட்டப்படுகிறது. 

இணையத்தில் அசோகமித்திரனின் முதல் அட்டை இருக்கிறதா என்று கூகுளில் தேடியபோது இதுதான் வந்தது. 


இதைக் கூட அசோகமித்திரன் மீதான அன்பின் வெளிப்பாடாகத்தான் பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன். இது அசோகமித்திரனின் முதல் தொகுதியின் தலைப்பு என்பதை உள்ளேயும் குறிப்பிட்டிருந்தால், 'எடுத்துக்கொண்டதற்கு' அன்புதான் காரணம் என்று நம்பலாம். 

எழுத்து இலக்கியம் என்று எழுதப்படுவதெல்லாம் சினிமாத்தனமாக ஆகிவிட்டபோது எழுத்தாளன் மட்டும் சினிமாக்காரனாக ஆகாமல் இருப்பதெப்படி. சினிமாக்காரனாக ஷீணித்துவிட்டதில்தான் - சுஜாதா பாலகுமாரன்களுகுக்கூட இல்லாத அளவுக்கு - இலக்கிய எழுத்தாளன் நம்பர் ஒன் என்று சொல்லிக்கொள்பவனுக்கு எவ்வளவு பெருமை. 

எழுத்தாளனே இப்படி இருந்தால் வாசகன் எப்படி இருப்பான். வாசகன் இப்படி இருந்தால் எழுத்தாளன் வேறு எப்படி இருப்பான். 

ஒரு காலத்தில் இருந்ததைப் போல தமிழில் இனி இலக்கியம் வரும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.