மார்ச் 2015 முதல் ஜூன் 2016 வரை எழுதிய 9 சிறுகதைகளின் தொகுப்பே தவிப்பு.
இந்தப் புத்தகத்தில், முதலாவதாக இருக்கிற கோபுரத்திற்கு முன், கடைசியாக எழுதிய கதை என்றால், விமலாதித்த மாமல்லன் கதைகள் (1980 - 1994) தொகுப்பின் இறுதியில் இருக்கிற, அக்டோபர் 1994ல் எழுதி, மாலன் ஆசிரியராக இருந்த தினமணி கதிர் இலவச இணைப்பில் வெளியான விபத்து கதையைத்தான் சொல்லவேண்டும்.
எக்ஸ்ப்ரஸ் எஸ்டேட் என்று குறிப்பிடப்பட்ட, இப்போது எக்ஸ்ப்ரஸ் அவென்யூவாக இருக்கிற பரந்து விரிந்த இடத்தில்தான் எக்ஸ்ப்ரஸ் குழுமம் அப்போது இயங்கிவந்தது. அதன் நுழைவு, அண்ணாசாலை ஆவினுக்குப் பக்கத்தில் இருக்கிற கிளப் ஹவுஸ் ரோடின் கடைசியில் இருக்கும் என்றால் அதன் கொல்லை, ராயப்பேட்டை மணிகூண்டையும் சத்யம் திரை வளாககத்தின் பார்க்கிங் நுழைவையும் இணைக்கிற ஒய்ட்ஸ் ரோடில் இருக்கும்.
நேரில் சென்று மாலனிடம் விபத்து கதையைக் கொடுத்தேன். படித்த மாலன், இதை வெளியிடுகிறேன். குல்லாவை எனக்குக் கொடுத்திருக்கக்கூடாதா என்றார். குஷியில் உள்ளூர துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தாலும் நன்றி தெரிவிக்கும் வகையில் சிரித்ததாய் உதட்டால் ஒரு கோடிழுத்துவிட்டு வந்தேன். குல்லா, பாவை சந்திரன் இணையாசிரியராக இருந்த (சசிகலா) நடராஜனின் புதிய பார்வையில் வெளியாகியிருந்தது.
குமுதத்தின் ஆசிரியராக இருந்த சுஜாதா, நல்ல கதை, ஆனாலும் இப்படி மாற்றி எழுதினால் இன்னும் நன்றாகும் என அச்சுபிச்சு என்று உளறிவைத்ததையோ, குங்குமத்தில் முரசொலிமாறனுக்குப் பிடித்திருந்தாலும் கருணாநிதி மூடநம்பிக்கை அது இது என்று எதாவது சொல்லிவிடுவாரோ என எண்ணி வேண்டாம் என்று சொல்லியதாக சுகுமாரன் மூலம் தெரியவந்ததையோ மாலனிடம் சொல்லிக்கொள்ளவில்லை.
அது - ஆபீஸுக்கே சரியாகப் போகாமல், போனாலும் அடப்போங்கடா என்று அட்டெண்டன்ஸில் கையெழுத்துப் போட்ட கையோடு, அராஜகமாக டிரைவ் இன்னிற்கு வந்து உட்கார்ந்து கதையெழுதிக்கொண்டிருந்த நேரம். முதன்முதலாக ஜெயமோகனைப் பார்த்தது அப்போதுதான். பிரசன்னா ராமசாமி அரவிந்தன் என்று கூட இன்னும் இரண்டு மூன்று பேர்களுடன் குட்டி தாதா போல் வந்துகொண்டிருந்தார்.
நேரில் சென்று நான் கொடுத்த அத்தனைக் கதைகளும் வாஸந்தி ஆசிரியராகவும் அரவிந்தன் உதவி ஆசிரியராகவும் இருந்த இண்டியா டுடேவில் வரிசையாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அரவிந்தனை எங்கு பார்த்தாலும் ஜெயமோகன் திருடன் மொக்கை என்று விலாவாரியாக விமர்சித்துத் திட்டிக்கொண்டிருப்பேன். அப்போது தீவிர இந்துத்வராக இருந்த அரவிந்தனுக்கு, நான் நீச்சனாகவும் ஜெயமோகன் பரமாச்சாரியாராகவும் தெரிந்திருக்கவேண்டும்.
பிரசன்னா ராமசாமிதான் அறிமுகப்படுத்தியதாக நினைவு. பார்க்க, நான் குர்த்தா அணிந்து கூட்டை மறைத்துக்கொண்டு ஆள்போல தெரிந்த பலப்பக்குச்சியாக இருந்தேன் என்றால் ஜெயமோகன் சட்டையை டக்கின் செய்து பேண்ட் அணிந்திருந்த குச்சி மிட்டாய் போல இருந்தார்.
எழுதிக்கிட்டு இருக்கேன் என்றேன்.
இங்க எழுதறீங்களா. இவ்வளவு சத்தத்துக்கு நடுல என்னால ஒரு வார்த்தை கூட எழுதமுடியாது என்றார்.
இதே சமயத்தில் ஒருநாள் மதியம் டிரைவ் இன்னில் சாருவைப் பார்த்தேன். எதிரில் நீலநிறப் புடவையில் யாரோ ஆண்ட்டியுடன் செல்ஃப் சர்வீஸில் அமர்ந்திருந்தான். நமக்கெதுக்கு என்று சும்மா கையை ஆட்டிவிட்டு, சிகரெட் வாங்க பெட்டிக்கடைக்குப் போனேன். திரும்பி வருகையில், குல்லா, மேஜிகல் ரியலிஸம். ரியல் கம்பேக் என்றான் கட்டை விரலை உயர்த்திக்காட்டி. தேங்க்ஸ் என்று நன்றிச் சிரிப்புடன் வெளியில் வந்துவிட்டேன். அநேகமாக சாரு உட்கார்ந்திருந்த, ஓரமாக இருந்த அந்த நடு மேஜைதான் பெரும்பாலும் என் இடம். குல்லா கூட அங்கே அமர்ந்து எழுதியதுதான்.
சுஜாதாவாவது சும்பையாவது, எழுதியது எழுதியதுதான் எவனுமே போடாவிட்டால்தான் என்ன என்று இருந்ததால்தான் குல்லா இன்றளவும் இருக்கிறது. காசு பணம் பெயர் புகழ் என்று எதுவுமே இல்லாவிட்டாலும் பேனாவில் எழுதிக்கொண்டிருந்த அந்தக் காலத்தில்கூட ஒவ்வொரு கதையையும் இம்போஸிஷன் போல எட்டுமுறைக்குக் குறையாமல் திரும்பத்திரும்ப எழுதிக்கொண்டிருந்தவனுக்கு, நான் எழுதினதுல கைவைக்க நீ யார்ரா என்கிற, இந்தத் திமிர் தெனாவட்டு கூட இல்லாவிட்டால் எப்படி.
1989 முதல் 1994 வரை ஐந்து வருடங்கள் எழுதமுடியாமல் தவித்துக்கொண்டிருந்துவிட்டு, அந்த ஆறு மாதங்களில் எட்டு கதைகளை எழுதினேன். எட்டில் முதலில் எழுதிய ஒளி சுபங்களாவில் வெளியானது. அக்டோபர் 1994 புதிய பார்வையில் வெளியான உயிர்த்தெழுதல் இலக்கியச் சிந்தனையின் மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர்ந்தெடுத்தவர் பெயர் காரணமாக, 786 என்று முடிகிற கதை என்பதால், இலக்கியச் சிறப்புக்குக் கிடைத்ததாக அதை நான் எடுத்துக்கொள்ளவில்லை. அந்த வருடத்தின் சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்தவர் சிவசங்கரி. அவருடைய இலக்கிய ரசனையின் லட்சணம் 1981ல் வெளியான என் அறிமுகக் கதையான வலியிலேயே தெரிந்த விஷயம் என்பதால் உயிர்த்தெழுதல் தேறாது என்று நன்றாகத் தெரியும். 1989ல் எழுதி 1991ல் காலச்சுவடில் சுந்தர ராமசாமி வெளியிட்ட நிழல் கதையையும் சேர்த்து உயிர்த்தெழுதல் என்கிற பெயரில் மூன்றாவது தொகுதியாக 1994 டிசம்பரில் வெளியிட்டேன். அ. பாரதி என்கிற பெயரில் காலச்சுவடில் உயிர்த்தெழுதலுக்கு, ஒன்றுமேயில்லை என்று மதிப்புரை எழுதியிருந்தார் அரவிந்தன்.
முற்றாக நிராகரிக்கிற அளவுக்கு மோசமில்லை. அதில் நல்ல கதைகளும் இருக்கின்றன என்று, அது வெளியானபோதே ஜெயமோகன் சொன்னதாக 2018 புத்தகக் காட்சியில் கூறினார் அரவிந்தன். தி இந்து தமிழில் என்னை புனைவு என்னும் புதிர் எழுதவைத்தவரும் இதே அரவிந்தன்தான். புனைவு என்னும் புதிர் தலைப்பே அவர் வைத்ததுதான்.
குல்லவை விட உயிர்த்தெழுதலில் வருகிற, அன்றாட மொழியில் ஆன்மீகம் பேசுகிற முஸ்லீம் சாமியார், அப்போது தீவிர RSS ஆக இருந்த அரவிந்தனை எரிச்சலூட்டியிருப்பாராயிருக்கும். DRI ஆபீஸில் வைத்து, தவிப்பு கதையைப் படித்துக் காட்டியபோது, தமிழ் படிக்கத்தெரியாத இக்பால், நியாயமா பேசற நீங்களும் முஸ்லீமை டெரரிஸ்டாதான் எழுதறீங்க பாத்தீங்களா என்று வருத்தப்பட்டார்.
தி இந்து பொங்கல் மலரில் அரவிந்தன் வெளியிட்ட கோடு கதையில், கொலுத்துவேலை பார்க்கும் இப்ராஹிம் பெரிய அதிகாரியான ஶ்ரீனிவாச ராகவனை செக்மேட் செய்துவிடுகிறார். அதற்கு நானென்ன செய்யமுடியும்.
அப்படியும் எழுதுவேன் இப்படியும் எழுதுவேன் எப்படிவேண்டுமானாலும் எழுதுவேன். எடிட்டர் சுஜாதாவின் அட்வைஸை எத்திவிட்டு வந்ததைப்போல, இவர்களுக்குத் தெரிந்தது இவ்வளவுதான் என்று எல்லோரையும் இடதுகையால் ஒதுக்கிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.
16 வருட இடைவெளிக்குப்பின் 2010ல் திரும்ப எழுத வந்து இணையத்தில் எழுதிய அனைத்தையும் கதைகளே இல்லை என்று நானே நிராகரித்துவிட்டேன் - எழுத்துக் கலை - 2 ஏன் நிராகரித்தேன்
சரியில்லை என்றால் தன்னையே நிராகரித்துக்கொள்ள முடிகிறவனை யாருடைய திரஸ்கரிப்பு என்ன செய்துவிடும்.
கோபுரம் (மார்ச் 2015) - காலச்சுவடு - ஏப்ரல் 2015
பரிசு (ஆகஸ்ட் 2015) - கல்கி - தீபாவளி மலர் 2015
செடி (செப்டம்பர் 2015) - காலச்சுவடு - பிப்ரவரி 2016
வரிக்குதிரைகள் (ஆகஸ்ட் 2015) - கணையாழி - ஜனவரி 2016
எலிகள் (அக்டோபர் 2015) - குமுதம் - நவம்பர் 2015
கோடு (நவம்பர் 2015) - தி இந்து - பொங்கல் மலர் 2016
வேண்டுதல் (மார்ச் 2016) - ஆனந்த விகடன் மே 2016
குருவி சாமியார் ( ஏப்ரல் 2016) - உயிர்மை - ஜூன் 2016