பிரபலம் என்பதற்காக மட்டுமே எனக்கு எந்தக் காலத்திலும் எவரையும் பிடித்ததில்லை. அப்படியே ஏதேதோ காரணங்களுக்காகப் பிடித்திருந்தாலும் சிவாஜி கண்ணதாசனில் இருந்து ஜெயகாந்தன் பிரமிள் அசோகமித்திரன் சுந்தர ராமசாமி வரை கமல் ரஜினி உட்பட பிடித்தும் பிடிக்காமலும் போயிருந்த காலகட்டங்கள் இருந்திருக்கின்றன.
ஆனால் என்னையே எனக்கு பிடிக்காமல் போனதென்பது அநேகமாக நிகழ்ந்ததில்லை. சில மோசமான சம்பவங்களுக்குப் பின் கேவலமாக உணர்ந்து நொந்துகூடப் போயிருக்கிறேன் என்றாலும் என்னையே எனக்கு எப்போதுமே பிடிக்காமல் போனதில்லை. அப்படிப் போயிருந்தால் இதை இப்போது எழுதிக்கொண்டிருக்க, இருந்திருக்கமாட்டேனோ என்னவோ.
என்னளவில் இதுதான் சுயமரியாதை. இதை சுயநலம் என்றுகூடச் சொல்லலாம் ஆனால் திமிரில்லை. சுயத்தை மதிப்பது ஒருபோதும் திமிர் ஆகாது - பொதுப்பார்வைக்குத் திமிர் மாதிரித்தான் தெரியும் என்றாலும். நான் எனக்கு முக்கியம் எனுப்போது அதில் நீ இல்லைதான். ஆனால் அதற்காக நீ இல்லவேயில்லை என்றில்லை. அதில் நான் இருக்கிறேன் அவ்வளவுதான்.
சுயமரியாதை என்பது, யாரோ ஒருவர் சொல்லிக்கொடுத்தார் என்பதற்காகப் பின்பற்றுகிற விஷயமில்லை. ஒவ்வொரு உயிருக்கும் அடிப்படையில் இருக்கவேண்டியது. சுயமரியாதை இருப்பதென்பது அடுத்தவனை அவமரியாதையாக நடத்துவதன்று. தன் மரியாதைக்கு அணுவளவு பாதிப்பு வந்தாலும் அதை ஏற்படுத்தியவன் எவனாக இருந்தாலும் விளைவுகளை யோசிக்காது தன்னையே இழக்க நேர்ந்தாலும் கொஞ்சமும் தயங்காமல் - புத்திசாலிகளுக்கு முட்டாள்தனமாகத் தோன்றினாலுல் - அதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் எதிர்த்து நிற்பதே சுயமரியாதை.
இதனாலேயே, பிரபலங்கள் என்பதற்காகவே அவர்களோடு நெருங்கி இழைவதோ அவர்களைப் பார்த்ததும் தன்னிச்சையாக இளிப்பதோ என் இயல்பிலேயே இல்லாமல் போய்விட்டது. பிரபலம் என்பதற்காகவே அவர்களைப் புறக்கணிப்பது, நாம் பிரபலமில்லை என்கிற ஏக்கத்தின் விளைவா, அல்லது அவர்களை அலட்சியப்படுத்திதுவதன் வழியே நிறைவுகொள்கிற நம் தாழ்வுமனப்பான்மையா என்பதையும் கவனத்தில் கொள்வது நமக்கு நல்லது.
புத்தகக் காட்சியில் சிறைக்கு நூல் தானம் என்று போடப்பட்டிருந்த இடம், தாண்டமுடியாத அளவிற்குக் கும்பலால் நெரிந்துகொண்டு இருந்ததால் எரிச்சலை உண்டாக்கிற்று. உள்ளே, தெரிந்த முகமாக இருந்தது பேரறிவாளன் என்பது பிறகு துலங்கிற்று. நாமும் நம் புத்தகங்களைக் கொடுக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டு கடைகளுக்குப் புத்தகங்களைக் கொடுக்க என் டிராலி பேகை தள்ளிக்கொண்டு சிரமப்பட்டுக் கடந்துவிட்டேன்.
காமன்ஃபோக்ஸ் ஆர்டருக்காக புக்ஃபேருக்குப் போகவேண்டியிருந்த அன்று, என் அச்சுப் புத்தகங்கள் ஏழிலும் ஒவ்வொன்றை எடுத்து ஒன்றாகக் கட்டிக்கொண்டு சென்றேன். வெளியேறும் கடைக்கோடி வாயிலிலேயே காமன்ஃபோக்ஸ்காரரிடம் அவருக்குரியதைக் கொடுத்துவிட்டு நேராக சிறைச்சாலை ஸ்டாலுக்குப் போனேன்.
அப்போதும் சரியான கூட்டம். ஸ்டாலுக்குள் ஒரு பக்கமாக சீருடை அணிவிக்கப்பட்ட ஜவுளிக்கடை பொம்மைபோல சிரித்த போஸில் பார்வைக்கே பெரிய அதிகாரி போல ஒருவர் நின்றிருந்தார். கடையை அடைத்தாற்போல அவரருகில் வெளிப்புறத்தைப் பார்த்தபடி ஸ்தூலமான சீருடைப் பெண்கள் இருவர். அவர்களுக்குப் பின்னால் இருந்த மேசைமேல் பேருக்கு கொஞ்சம் புத்தகங்கள். எதிர்ப்புற பக்கவாட்டிலும் அலங்காரமற்ற சீருடையில் பெண் காவல் பொம்மைகள். பிரதான பொம்மைக்கருகில் அவரவரும் வந்து நின்று போட்டோ எடுத்துக்கொண்டு போய்க்கொண்டு இருந்தனர். புத்தகம் கொடுத்தால்தான் போட்டோ என்று கண்டிப்பாக இருந்திருந்தால்கூட, மலிவு விலை ஒல்லி புத்தகங்களாவது கொஞ்சம் சேர்ந்திருக்கும். பெரியவர் கொஞ்சம் பெருந்தன்மையானவராகவும் இருப்பார்போல. திருப்பதி பெருமாளுக்கு போலீஸ் அலங்காரம் சாத்தியது மாதிரி அவர் அமைதியாகச் சிரித்தபடி நின்றிருந்தார். அருகிலிருந்த இரண்டு பெண் இன்ஸ்பெக்டர்களும் ஜாடையால் ஜருகண்டி சொல்லிக்கொண்டிருந்தனர்.
ஏழு புத்தகங்களைக் கொண்ட கட்டு எவ்வளவு பெரிதாக இருந்துவிடப்போகிறது, இருந்தாலும் என்னால் உள்ளேயே நுழைய முடியவில்லை. புத்தகம் கொடுக்க வந்தவன் போய் முட்டிமோதிப் போகவேண்டியிருக்கிறதே என்பதிலேயே பாதி எரிச்சல். குறைந்தபட்சம், கும்பலாக நின்ற பொதுமக்களாவது வருவதும் போவதுமாக இருந்தனர். ஆனால் இந்தப் பக்கவாட்டு லேடி கான்ஸ்டபிள் பொம்மைகள், கிழபோல்டு தாடியொன்று புத்தகங்களோடு வருகிறதே என்றுகூட நகராமல், பொதுமக்களைப் போலவே பெருமாளை சேவித்துக்கொண்டு இருந்தன. அவர்களுக்குப் பின்னால் பெஞ்சுகள் போடப்பட்டு அதில் இரண்டு சதுரவட்டைகள் கீழே காக்கியும் மேலே கலருமாக அமர்ந்து ஹீரோ பெருமாளையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தன.
புக்கு வாங்கதானே ஸ்டால் போட்டிருக்கீங்க. குடுக்க வரவனை உள்ள போகவிடுங்க என்று எரிச்சலுடன் கூறியபடி உள்ளே போனேன். உள்ளேயிருந்த மேசைக்குப் பின்னால் ஒருவர் குனிந்த நிலையிலேயே மேலேயிருந்த புத்தகங்களை எடுத்து அட்டைப் பெட்டிகளுக்குள் வைத்துக்கொண்டிருந்தார். அங்கே அந்த ஸ்டால் போடப்பட்டிருப்பதன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டிருந்த ஒரே மனிதர் அவர் மட்டுமே. கர்பக்கிரகத்துக்கு அருகில் வந்துவிட்ட ஆழ்வாரைப் போல் நானிருக்க, பட்டர்ளைப் போலிருந்த பெண் இன்ஸ்பெக்டர்கள் இருவரும் போங்க என்று சீருடைப் பெருமாளை நோக்கிக் கைகாட்டினர். பக்தைகள் செல்ஃபி எடுத்துக்கொள்வதில் பீரிதியோடு இருந்ததாலோ என்னவோ பெருமாளுக்கு ஒருவன் புத்தகங்களோடு நிற்பது கடைக்கண்ணில்கூடப் படவில்லை.
போங்க என்று ஜாடை காட்டியவர்களிடம், நான் புக்கு குடுக்க வந்திருக்கேன். போட்டோ எடுத்துக்க வரலை என்றேன் கடுப்படிக்கும்விதமாக.
ஓகே ஓகே புக்க வாங்கிக்கங்க என்றார் பெருமாள்.
குடுங்க என்று கை நீட்டினர் பெருந்தேவிகள்.
ரசீது என்றேன்.
அதோ அங்கே என்று சதுரவட்டைகளுக்காய் கைநீட்டிவிட்டு நகருங்கம்மா என்று பக்கவாட்டு பணிபெண் காவலர்களிடம் கூறினர் பெருமாளுக்கு தொந்தரவு செய்துவிடாதவண்னம்.
இடமிருந்தால் தானே நகர. தள்ளிப் போய்விட்டால் நம் குரல் எங்கே பெரும் ஆளுக்குக் கேட்காமல் போய்விடுமோவென்று, தேவையேயில்லாமல் உரக்க, 'நானே எழுதி நானே வெளியிட்ட புத்தகங்கள்' என்றேன். அங்கே யாரும் புத்தகங்களையே சட்டைசெய்யாதபோது எழுதியவனாவது வெளியிட்டவனாவது. பள்ளிப் பாடப்புத்தகத்தைத் தவிர அங்கேயிருந்த ஆர்டினரி சீருடைகள் ஒன்றாவது வாழ்க்கையில் வேறு எந்த புத்தகத்தையாவது புரட்டியிருக்குமா என்பதே சந்தேகமாக இருந்தது. அந்த இடத்தின் முக்கியத்துவம் கூட அவர்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றிற்று.
என் முதல் தொகுதியான அறியாத முகங்களை, இப்போது போலவே 1983ல் நானே வெளியிட்டபோது,
ஐயா, அறியாத முகங்கள் என்கிற புத்தத்தை நீங்கள் வெளியிட்டுள்ளதாக அறிகிறேன். படிக்க ஆவலாய் உள்ளேன். அனுப்பிவைக்க முடியுமா என்று கேட்டு, கைதி எண் குறிப்பிட்டு,
சத்ரபதி வெளியீடு, 13/7, CPWD Quarters, K. K. Nagar, Madras 600078 என்கிற முகவரி எழுதப்பட்ட அஞ்சலட்டை ஒன்று வந்திருந்தது.
அதில் convict என்று இருந்தது. அது என்னவென்று புரிந்தும் புரியாமல் இருக்கவே, தெளிவுபடுத்திக்கொள்ளவும் பெருமை பீத்திக்கொள்ளவும் - இலக்கியக் கூட்டத்தில் அன்று எனக்கு சிறை, கைதி, போராட்டம் என்றாலே, ஹோல்சேலராகத் தெரிந்த ஒரே மனிதர் எஸ் வி ராஜதுரைதான் என்பதாலும் ஆபீஸுக்கு சைக்கிளில் போகிற வழியில் அவர் வீடு இருந்ததாலும் போஸ்ட் கார்டுடன் அவரிடம் போனேன். பார்த்துவிட்டு தண்டணை அனுபவிச்சிக்கிட்டு இருக்கற கைதி. படிக்கக் கேக்கறாரு பாவம் அனுப்பி வைங்க என்றார்.
நம்மையும் மதித்து ஒருத்தன் கேட்கிறானே, கேட்காமலேயே ஊரில் பாதிப்பேருக்கு ஓசியில் கொடுத்திருக்கிறோம், இதிலென்ன போச்சு என்று தபாலில் அனுப்பிவைத்தேன். அடுத்த தொகுப்பான முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்களை சிவன் கோவில் சுண்டல் போல போகிற வருகிறவர்களுக்கெல்லாம் இப்படிக் கொடுக்கவில்லை என்பதும் அது 'விற்காமல்' போனதற்கு முக்கியமான காரணம். எனவே, அச்சடிப்பு விவரம் இருக்கிற தாளைக் கிழித்துவிட்டு, அப்போதுதான் அடித்ததைப் போல வருடத்தை மாற்றி அச்சடித்து ஒட்டி, அதே புத்தகத்தை இரண்டாவது முறையாக நூலகத்திற்கு, எல்லோரையும் போல தள்ளிவிட்ட பாவம் என்னைச் சேராது என்று சமாதானப்படுத்திக்கொண்டேன். பிச்சிப் பிச்சி நூலகத்திலிருந்து வந்த பணம் போன இடம் தெரியாமலே போய்ச் சேர்ந்து, செய்த பாவத்திற்குப் பரிகாரமாகிப்போனது.
ஆகவே ஆதியிலிருந்தே நிர்பந்தம் காரணமாகக் கொடுத்துச் சிவந்த கை என்பதால் 1986ஐ பார்க்க 2022ல் நஷ்டம் வராமல் விற்கமுடிகிறது என்பதே பெரிய பாக்கியம் இல்லையா. எனவே கொடுப்பதில் பிரச்சனையில்லை; ஒழுங்காகப் போய்ச்சேருமா என்பதே யோசனையாக இருந்ததால், சதுரவட்டைகளிடம் போய் ரசீது என்றேன். எல்லோரும் போட்டோ எடுத்துக்கொள்வதைப் பார்ப்பதிலேயே அவர்கள் கவனம் குவிந்திருந்ததால் என் குரல் அவர்களுக்கு எட்டவேயில்லை. .
ரசீது குடுங்க என்றேன் சத்தமாக.
சத்தம் கேட்டதும் சல்யூட் அடித்துவிடுபவர் போல இருவரில் ஒருவர் சடாரென எழுந்து நின்றார். புத்தகங்களின் முதுகை எண்ணி 7 என்று குனிந்து எழுதி, ஏற்கெனவே கையெழுத்துப் போட்டிருந்த ரசீதைக் கிழித்துக் கொடுத்தார்.
கெளண்ட்டர் ஃபாயில்ல எழுதவேயில்லையே என்றேன்.
அது எங்களுக்கு. உங்களுக்கு இது போதும் என்றார்.
அது எப்படிங்க. எல்லா கெளண்ட்டர்ஃபாயிலும் ப்ளாங்காவே இருக்குதே என்றேன்.
அதை அப்பறம் எழுதிக்குவோம் என்றார்.
கையோட எழுதலேனா எந்த ரசீதோடது எந்த கெளண்ட்டர்ஃபாயில்னு எப்படித் தெரியும். அப்பறம் எப்படி எழுதுவீங்க.
அவசர அவசரமாக எதோ ஒன்றை நிரப்பினார்.
பாருங்க இதுல என்ன நம்பரு இருக்குது அதுல என்ன நம்பர் இருக்குது. எப்படி டேலி ஆகும் என்றேன்.
ஜாலியாக வேடிக்கை பார்க்க விடாமல் என்னடா இவனோடு பெரிய தொல்லை என்பதைப் போல எரிச்சலுடன் அதைக் கசக்கிப் போட்டுவிட்டு வேறொன்றைப் புதிதாக எழுதினார்.
இங்க, புக்கு குடுக்க வரவங்கதான் VIP. வாங்கிக்கறவர் இல்லே என்று சொல்லிவிட்டு வந்தேன். அது DGPக்குக் கேட்டிருக்கவாய்ப்பில்லை என்பதால்தான் இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன்.
1410 ரூபாய் புத்தகங்களுக்கு, தேதிகூட போடாத ரசீதுதான் கிடத்திருக்கிறது. அடுத்தமுறை உள்ளே போனால் என் புத்தகங்கள் நூலகத்தில் இருக்கின்றனவா என்று பார்த்துச்சொல்லும்படி, ட்விட்டரில் என்னை ப்ளாக் செய்துவைத்திருக்கும் சவுக்கு சங்கரை இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் என் நூல்களெல்லாம் இப்படி நானே தானமாய் கொடுத்தால் தவிர நூலகங்களில் இருக்க இப்போதெல்லாம் வாய்ப்பே இல்லை.