வரப்போகும் அந்த வருடங்களில் அவள் யாருக்காகவும் வாழ வேண்டியதில்லை; தனக்காகவே அவள் வாழப்போகிறாள். கண்மூடித்தனமான வற்புறுத்தலால் அவளுடைய விருப்பத்தை வளைத்துவிடும் சக்திவாய்ந்த ஆசைகொண்ட வேறொரு மனம் இருக்கப் போவதில்லை; சக உயிரினத்தின்மீது தன்னுடைய தனிப்பட்ட ஆசையைச் சுமத்த தங்களுக்கு உரிமை உள்ளது என்று ஆண்களும் பெண்களும் நம்புவதற்குக் காரணமாக இருப்பது அந்த வற்புறுத்தல்தான். அந்தச் செயலின் நோக்கம் அன்பு நிறைந்ததா, குரூரமானதா என்பது ஒரு பொருட்டில்லாமல் நிச்சயம் அது ஒரு குற்றமே என்பதை அந்தக் குறுகிய கணத்தில் உண்டான ஞான வெளிச்சத்தில் அவளால் பார்க்கமுடிந்தது.
ஆண்களால் ஆன சமூகத்தில் பொதுவான புறவயப் பார்வையில் பெண்ணைக் கவர்ச்சிப்பொருளாகவே பார்க்கிறவன் கூட பெண்ணின் மனதை வெல்வதையே உண்மையான வெற்றியாகக் கருதுகிறான். எனவேதான் எழுத்திலும் பெண் ஸ்பெஷலிஸ்ட்டுகளுக்கு ஏகப்பட்ட டிமாண்டு. வணிக எழுத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சுஜாதாவைவிட வெறிகொண்ட வாசக வாசகிகள் பாலகுமாரனுக்கே அதிகம். இலக்கிய எழுத்திலும் ஜானகிராமனை ஜிலுஜிலுப்பு என்று ஒதுக்கத்தான் முடிந்ததே தவிர சுந்தர ராமசாமியால் அவரைத் தொடமுடியவில்லை. ஆக, வணிகமோ இலக்கியமோ ஆண் எழுத்தாளர்களே 'பெண் மனதை'யும் எழுதி, இருபாலரையும் கவர்கிறவர்களாக இருக்கிறார்கள்.