'ஒரு மனிதன் எது ஒன்றைச் செய்தாலும், அது எல்லா மனிதர்களும் செய்ததைப்போலத்தான். அதனால்தான் தோட்டத்தில் இழைக்கப்பட்ட கீழ்ப்படியாமை என்ற ஒற்றைச் செயல் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் கறைபடுத்தும் என்பது நியாயமில்லை என்று ஆகிவிடாது; அதானாலேயே, மனிதகுலத்தைக் காப்பாற்ற, ஒரு ஒற்றை யூதனை சிலுவையில் அறைவது சரியில்லை என்று ஆகிவிடாது. ஒருவேளை ஷோப்பன்ஹவரின் கூற்று சரியாகவும் இருக்கலாம்: நானே எல்லா மனிதர்களும், எந்த மனிதனும் எல்லா மனிதனே, ஷேக்ஸ்பியரும் ஒரு வகையில் இந்த மோசமான ஜான் வின்சென்ட் மூன்தான்.'
திடீரென இப்படியொரு தத்துவப் பேச்சை இடையில் செருகுவதற்கான நியாயத்தைத் தர்க்கரீதியாக நம்பகத்தன்மையைக் கொடுக்கும்விதமாகக் கிட்டத்தட்ட 350 வார்த்தைகளுக்கு முன்பாக வின்செண்ட் மூன் எப்படிப்பட்டவன் என்பதை விவரிக்கும்போதே,
'அவன் தீவிரத்துடனும், தற்பெருமையுடனும் ஒவ்வொரு பக்கத்தையும் படித்திருந்தான். கடவுளுக்குத்தான் தெரியும் என்னவிதமான கம்யூனிஸ்ட் புத்தகங்கள் என்று. எவ்விதமான விவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க அவன் இயக்கவியல் பொருள் முதல்வாதத்தைப் பயன்படுத்தினான். ஒருவன் மற்ற மனிதனை வெறுப்பதற்கு அல்லது விரும்புவதற்கு எல்லையற்ற காரணங்கள் கொண்டிருக்கலாம்: மூன் பிரபஞ்சத்தின் வரலாற்றையே ஒரு மிக மோசமான பொருளாதார முரண்பாட்டுக்கு சுருக்கினான். புரட்சியானது வெற்றி அடையும்படி முன் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்று உறுதியாகக் கூறினான்.'
என்று விதைத்து வைக்கிறார் போர்ஹே.
எழுத்து மனக்கொதிப்பில் பித்து நிலையில் உருவாவதாக அடித்துவிட்டுக் கொள்வதெல்லாம் அரிச்சுவடி வாசகனிடம் பிம்பத்தைப் பெரிதாக்கிக்கொள்ள மட்டுமே பயன்படுமேயன்றி, இதுபோன்ற உலகத்தரமான உயர்ந்த எழுத்தைப் படைக்க ஒருபோதும் உதவாது.