பரீக்ஷாவில் இருக்கும்போது பீட்டர்ஸ் காலனி எதிரில் இருந்த நியூ காலேஜ் நிறுத்தத்தில் நிறைய ரூட் பஸ்கள் வருவதில்லை என்பதால், எங்கு போகவேண்டுமானாலும் சஃபையர் பெட்ரோல் பங்கிற்கு எதிரிலிருந்த சர்ச் பார்க் பஸ் நிறுத்தத்திற்குதான் போயாகவேண்டும்.
யாருடைய வருகைக்காகவோ அல்லது அழகுபடுத்திவைக்கலாமே என்பதற்காகவோ, மெளண்ட்ரோட் நெடுகிலும் நடைபாதையின் விளிம்பில் கருப்பு வெள்ளை என்று மாறி மாறி பெய்ண்ட் அடித்து வைத்திருந்தார்கள். எதாவது ஒரு கருப்பு கார் வருவதற்கு முன்பாக சாலையைக் கடந்து எதிர்சாரி பிளாட்பரத்தின் வேள்ளைப் பெய்ண்ட்டில் காலை வைத்துவிட்டால் நிச்சயமாக பெரிய எழுத்தாளனாக ஆகிவிடுவோம் என்று எண்ணிக்கொண்டு ரோடை கிராஸ் செய்வான். பத்துக்கு ஒருமுறை அபூர்வமாகத் தவறிவிடும். எப்படியாவது பெரிய எழுத்தாளனாகிவிடவேண்டும் என்று, இரண்டாவது மூன்றாவது முறை என, மெளண்ட் ரோட் டிராபிக்கில் குறுக்கு மறுக்காய் ஓடிக்கொண்டிருப்பான். அவனவனும் தலைதெறிக்க சக்கரங்களில் பறந்துகொண்டிருக்கிற பரபரப்பான மெளண்ட்ரோடில் இந்த பைத்தியக்காரத்தனத்தை கவனிக்க யார் இருக்கிறார்கள் என்பதால் அற்பாயுஸில் அபத்தமாகப் போய்விடுவதைத் தவிர பெரிய பிரச்சனை எதுவும் இருக்கவில்லை.