அம்மா எரிச்சலூட்டுபவளாகத் தொடங்கியது, அவனுக்கு அறிவு பிடிபடத்தொடங்கியதிலிருந்து இருக்கலாம் என்று தோன்றியது. அறிவுக்கும் அவளுக்கும் எப்போதுமே சம்பந்தம் இருந்ததில்லை. அப்பாவுக்கு அவளிடம் வந்த எரிச்சலுக்குக் காரணம் கூட அவளது மடத்தனமாகத்தான் இருக்கவேண்டும் என்று, அவர் போன பிறகு அதிகமாகத் தோன்றத் தொடங்கிற்று.
அவளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல்தான், அப்பா அவளைத் திட்டியும் அடித்தும் தீர்த்துக்கொண்டு இருந்திருக்கவேண்டும்.
அவனுக்கு அப்பாவைப்போலவே, எரிச்சல் இருந்ததைப் போல மூலமும் இருந்தது. எரிச்சல் காரணமாக வந்த மூலகவும் இருக்கலாம். மூலம் காரணமாக வெளிப்பட்ட எரிச்சலாகவும் இருக்கலாம். ஆனால், அவர்கள் குடும்பத்துக்கே செவ்வாய் தோஷம் இருப்பதாகவும் மூலத்துக்கான மூல காரணமே அதுதான் என்று ஜோசியர் சொன்னதாகவும் அவன் பள்ளியில் படித்த காலத்திலிருந்தே சொல்லிக்கொண்டிருந்தாள் அம்மா.
எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு பெரிய அறிவாளியாகிவிடவேண்டும் என்று சிறுவயதிலிருந்தே பித்துப் பிடித்துத் திரிந்த அவனுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருந்த அப்பாவிடம் ஒட்டவேயில்லை. தன்னைவிட வயதில் பெரியவர்களாகத் தேடித்தேடி அவன் பழகியதற்கு, வீட்டில் கிடைக்காத அப்பாவை வெளியில் தேடிக்கொண்டிருந்தது கூட காரணமாக இருக்கலாம்.