அதுவரை, 'விட்டுவிட்டால் என்ன' என்கிற எண்ணமாக இருந்தது, மெல்ல விட்டுவிடுவது என்கிற முடிவாக அவனுக்குள் உறுதியாகத் திரளத்தொடங்கியிருந்தது. நான்கையும் யோசித்து முடிவு எடுப்பதாகத்தான் நாம் நம்புகிறோம். ஆனால் நம் மனமானது, நமக்கே தெரியாமல், சாதகமான காரணங்களையாகத் தேடித்தேடித் திரட்டி, எடுத்த முடிவை நியாயப்படுத்திக்கொள்ளவே பார்க்கிறது.
வேலையை விட்டால் என்னென்ன ஆகும். முதலில், மாதாமாதம் வருகிற பணம் இல்லாமல் போகும். அடுத்து இருக்க வீடு இல்லாமல் போகும். அம்மாவின் பென்ஷனை மட்டுமே வைத்துக்கொண்டு, இரண்டே பேராக இருந்தாலும் குடும்பத்தை நடத்துவது என்பது நடக்கிற காரியமே இல்லை.
இதெல்லாம், வேலையை விட்டுவிட்டு இங்கேயே கிடந்து உழல்வதாக இருந்தால்தானே. வேலையை விட்ட பின்பும் வேறு ஏதாவது வேலையைப் பார்த்துக்கொண்டு இங்கேயே கிடக்க இந்த வேலையை விடுவானேன். எந்தத் துறையாக இருந்தாலும் தனியார் நிறுவன வேலையை விடவும் அரசாங்க வேலை அப்படியொன்றும் மென்னியை நெரிப்பதில்லையே. அதுபோக தமிழை விட்டால் நமக்கு என்ன தெரியும். அதுவும் நாம் எழுதும் தமிழ் எல்லோருக்கும் புரிகிற தமிழும் இல்லை. எல்லோருக்கும் புரிகிறபடி, எல்லோருக்கும் பிடிக்கிறபடி எழுதுவதாக இருந்தால், ஆனந்தவிகடன் குமுதம் என்று பாலகுமாரன் போல போயிருக்கலாமே. அப்படியும் இருக்க முடியாது. அப்புறம் என்னதான் செய்வது என்று தோன்றியபோது அவன் சைக்கிள் கன்னிமாரா நூலக வளாகத்திற்குள் நுழைந்தது. வண்டியை ஓரமாக நிழலில் விட்டுவிட்டு, மரத்தடியில் போய் சும்மா உட்கார்ந்துகொண்டான்.
தன்னிச்சையாகத் தன் எண்ணமெல்லாம் எழுத்தை நோக்கியே போய்க்கொண்டு இருப்பதாகவும் அதனால்தான், நினைக்காமலேயே நூலகத்திற்கு வந்து சேர்ந்திருப்பதாகவும் தோன்றியதில் மனம் பூரித்தது.