ஈரோடுக்கு அனுப்ச்சாச்சு. இண்டுவிஜுவல் காப்பிய வாங்கிக்கங்கோ என்றபடி, டேபிளில் இருந்த தடி ஃபைலில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து அவனிடம் கொடுத்து, அதிலேயே இருந்த ஆபீஸ் காப்பியில் கையெழுத்தைப் போடச்சொல்லி ஃபைலை அவனுக்காய் திருப்பினார்.
வாங்கிக்கொண்டு திரும்ப பிரிவண்ட்டிவ் செக்ஷனுக்கு வந்தான்.
ஓஎஸ், சுகுமாரன், ஹேமலதா சீட்டில் இருந்தார்கள். அதுவே, அவன் கமல் பாத்திரத்தில் நடித்த மற்றும் இந்திரஜித் நாடகத்தில் சீன் மாறி அடுத்த சீனில் அதே ஆட்கள் வேறு ஆட்களைப்போல் இருப்பதைப்போல தோன்றிற்று. என்ன இது, காவியில் டபுள் மீனிங்கில் பேசிக்கொண்டு திரிந்ததைப் போல, இன்னும் கூட எண்ணங்கள் இப்படித் தோன்றிக்கொண்டு இருக்கின்றனவே என்று அவனுக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.
என்ன வாத்யாரே ஈரோடா என்றான் சுகுமாரன் சிரித்தபடி. அதைக் கண்டுகொள்ளாமல், ஏஓ கொடுத்த தாளை ஓஎஸ்ஸிடம் நீட்டினான்.
புகையிலைச் சாற்றுடன் தலையைத் தூக்கி விட்டத்தைப் பார்த்தபடி, உங்கழ ஈரோடுக்கு ழான்ஸ்ஃபவர் பண்ணி ழிலீவும் பண்ணிட்டா. கன்சிடர்... என்று சொல்ல ஆரம்பித்து, கொஞ்சம் இரு என்பதைப் போல சைகை காட்டிவிட்டு, வேஷ்டியை உயர்த்திக்கொண்டு துப்புவதற்காக பாத்ரூமுக்குப் போனார்.
ஓஎஸ் என்ன சொல்றாரு என்றான் சிவசுப்பிரமணியிடம்.
சுகுமாரன் குறுக்கிட்டு, அது ஒண்ணியுமில்லபா. நீ நேரா ஈரோடுக்குப் போய் டூட்டி ஜாய்ன் பண்ன வேண்டியதுதான் என்றான்.
போங்கடாங்க மயிரு என்பதைப் போல, 'அவ்வளவுதான' என்றான் பொதுவாக.