ஒரே சிட்டிங்கில் ஷங்கர் ராமன் வீட்டில் அமர்ந்து எழுதிய, அப்பா அம்மா நட்ட நடு ராத்திரியில் சண்டைபோட்டுக்கொள்கிற, பெரும்பாலும் உரையாடலாகவே போகிற கதையை, கேவிஆரிடம் படித்துக் காட்டிக்கொண்டு இருந்தபோது, அவர் மனைவிதான், என்னது சங்கர நாராயண பூஜையா. அது சத்ய நாராயண பூஜை இல்லையோ என்று திருத்தினார்.
எத்தனை தடவை பூஜைக்கு நடுவில், நைவேத்யமாக பிடித்து வைத்திருக்கும் ரவா லட்டை, எண்ணெய் பிசுக்கேறிய புத்தகத்தை வைத்துக்கொண்டு வாய்விட்டுக் கதை படித்துக்கொண்டிருக்கும் அம்மா கதையோடு கதையாய் சனியனே பீடையே பூஜை முடியட்டுண்டா என்று திட்டத் திட்ட எடுத்துச் சாப்பிட்டிருக்கிறோம். இருந்தாலும் இப்படிப் பிறத்தியார் திருத்தும்படி ஆகிவிட்டதே என்று அவமானமாகப் போய்விட்டது நினைவுக்கு வந்தது.தடுப்பிற்கு அடியில் குனிந்து பேரேட்டில் எதையோ மும்முரமாக எழுதிக்கொண்டிருந்த கே வி ராமசாமி தலையைத் தூக்கிப் பார்த்து முகமெல்லாம் பல்லானார்.
வந்துட்டியா. நல்லது என்றார் அவனுடைய அப்பா வயதில் இருந்த அவர். தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு, 'அம்மா எப்படி எடுத்துண்டா' என்று கேட்டார்
அவளுக்கு எப்படித் தெரியும். திருச்சிக்குப் போய்ட்டு வந்திருக்கான்னுதான நெனச்சிக்கிட்டு இருந்திருப்பா என்றான்.
அவளோட பாய்ண்ட் ஆஃப் வியூலேந்து பாத்தேனாதான், நாம என்ன பண்ணியிருக்கோம்னு உனக்குப் புரியும். அதுக்குக் கொஞ்சம் வயசாகணும்.