நீங்க சைவம்தானே என்றான் பாலாஜி.
ஆமா. ஆனா வெளில நான்-வெஜ்ஜும் சாப்பிடுவேன் என்றான்.
அப்ப நீங்க பிராமின் இல்லையா.
டேய் என்றான் மணி.
க்ளுக்கென சிரித்துவைத்தான் பாரதி.
பிராமின்தான் ஆனா பூணூல் போட்டுக்கலே.
என்ன சார் இது என்றான் அதிர்ச்சியுடன் பாலாஜி.
ஏன் என்ன என்றான் இவன்.
என்ன சார். பிராமணனா பொறந்துட்டு, பூணூல் போட்டுக்காம இருந்தா எப்படி சார். என்னால ஒத்துக்கவே முடியல என்று சலித்துக்கொண்டவனாய் எழுந்து, சட்டையைக் கழற்றினான் பாலாஜி. பழுப்பு நிறத்தில் இருந்த பனியனுக்கு வெளியே தெரிந்த பூணூல் அதைவிடவும் அழுக்காக இருந்தது. அசைவம் வேற சாப்பிடுவேன்னு சொல்றீங்க. என்னால ஜீரணிக்கவே முடியலே என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான் பாதி சிரிப்பும் பாதி சீரியஸுமாக.
கரெக்டுதான என்று, சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு, நான் சாப்படறது உனக்கு எப்படி ஜீரணமாகும் என்று இவன் கேட்டான்.
மூவருமே சிரித்துவிட்டனர். போட்டார் பாருடா என்றான் மணி.
சார் நீங்க சினிமால கதை வசனம் எழுதப் போகலாம். மெட்ராஸ்லதானே இருக்கீங்க. டிரை பண்ணினதில்லையா என்றான் பாலாஜி.