எப்ப எழுதுவீங்க.
இது என்ன பேட்டி போல கேட்கிறாரே என்று கூச்சமாக இருந்தது. இருந்தாலும் தயங்கியபடி,
எப்ப வேணும்னா எழுதுவேன்.
எப்ப வேணும்னான்னா... எப்படியும் ஆபீஸ் அவர்ஸ்ல எழுதமுடியாது. அப்ப வீட்லதான எழுதியாகணும்.
இல்ல. பெரும்பாலும் வெளியதான் எழுதறது. தோணும்போது, பார்க்கு லைப்ரெரி மரத்தடினு வசதிப்படற எடத்துல உக்காந்து எழுதறது. இப்பிப்ப டிரைவ் இன் உட்லண்ட்ஸ்ல எழுத ஆரம்பிச்சிருக்கேன்.
என்னது உட்லண்ட்ஸ் ஓட்டல்லையா. ஓட்டல்காரன் ஒண்ணும் சொல்லமாட்டனா.
செல்ஃப் சர்வீஸ்ல உக்காந்து மணிக்கணக்கா அரட்டையே அடிக்கிறோம் எழுதறத்துக்கு என்ன சொல்லிடப்போறாங்க. நா எழுதினதையே திரும்பத் திரும்ப எழுதற ஆளு. ஒரு காபிய குடிச்சிட்டு, சமயத்துல ரெண்டு, மூணு மணிநேரம்கூட, விடாம எழுதினதையே திரும்பத் திரும்ப எழுதிக்கிட்டு இருப்பேன். ஒண்ணுமே சொன்னதில்லே.
நல்லா எழுதுவீங்கனு ஞாநி சொல்லியிருக்காரு. ஆனா, இதுவரை நீங்க எழுதின எதையும் படிச்சதில்லே. எதை வெச்சு எழுதுவீங்க.
சொந்த அனுபவத்தைத்தான்.
எழுத்துனா மெஸேஜ் இருக்கவேண்டாமா பாரதி மாதிரி. சொஸைட்டி பத்தி இருக்கவேண்டாமா. காந்தி மாதிரி, மை லைஃப் ஈஸ் மை மெஸேஜ்னு சொல்லிடுவீங்க போலயிருக்கே என்றார். கிண்டலடிக்கிறார் என்று தோன்றவே ஜிவ்வென காதுமடல்கள் சூடாவதை உணரமுடிந்தது.
எழுத்து உண்மையா இருக்கணும்னா சொந்தமா அனுபவிச்சதைத்தான் எழுதணும் என்று அழுத்தமாகச் சொன்னான்.
அப்படின்னா எல்லா ரைட்டரும் மாஸ்ட்ரபேஷனைப் பத்திதான் மொதல் கதை எழுதவேண்டியிருக்கும் என்று சந்தேகத்திற்கே இடமில்லாமல் பட்டவர்த்தனமாய் கிண்டலடித்துச் சிரித்தார்.