எதிரில், குதிகால் செருப்பணிந்த கொண்டையொன்று குதிக்காதகுறையாய் போய்க்கொண்டு இருந்தது, பார்க்கக் குதிரை போலவே இருந்தது. கொஞ்சம் முத்தல் குதிரை. சஃபையருக்கு பஸ் பிடிக்கப் போகிறதாயிருக்கும். பஸ்ஸுக்கே ஹீல்ஸா என்று சிரிப்பு வந்தது. வேலைக்குப் போகத்தான் என்னல்லாம் வேண்டியிருக்கிறது.
ரயிலில் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த வாளிப்பான வடக்கத்திப் பெண், வாரி தூக்கிவைத்து ரப்பர்பேண்ட் போட்டு, அனாயாசமாக விட்ட தலைமுடி காரணமாகவும் குதிரையைப்போலவே இருந்தாள். ஜானகிராமன் சொல்வதைப்போல தட்டினால் வெங்கலம் மாதிரி ணங்கென சத்தம் கேட்கிறபடியாக இருந்தது உடம்பு. அவள் முகமும் உடம்பும் நெடுநாளைக்கு நினைவில் இருக்கும் என்று தோன்றிற்று.
பழைய குவார்ட்டர்ஸ் பின் வீட்டு ஆண்ட்டியிடம் சொன்னால், மனசை அலையவிடாமல் நீ எழுதவேண்டும் என்றுதானே நான் இருக்கிறேன், இன்னும் என்ன என்று செல்லமாகக் கன்னத்தில் இடிப்பார். பார்த்து நாளாகிவிட்டது. கேகே நகர் CGHSக்கு மூட்டுவலியை சாக்காக வைத்துக்கொண்டு, அவராக வந்தால்தான் உண்டு. வரும்போது நாமிருக்கவேண்டும். அம்மா இல்லாமலும் இருக்கவேண்டும். அப்படியான தருணம் ஒரே ஒருமுறைதான் அமைந்தது.