எட்டு மணிக்கு எழுந்து கொறடில் நின்று பல்தேய்த்து பத்து மணிக்கு சாவகாசமாகக் கடை திறக்கிற குடிகார ஊர் என்று பெயர் வாங்கிய பாண்டிச்சேரியில்தான் அப்படி இருந்தான் என்றில்லை, எல்லோருமே ஏதேதோ காரணங்களுக்காகத் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிற மெட்ராஸுக்கு வந்த பிறகும் அப்படித்தான் இருந்தான். இல்லையென்றல் ஆழ்வார்பேட்டையில் இருந்து சேத்துப்பட்டில் இருக்கும் பச்சையப்பன் கல்லூரிக்குப் போய்வருகிறவன், கையில் பஸ் பாஸ் இருந்தும் சேட்பட் பாலத்திற்கு அடியில் ஓடுகிறது என்பதைத் தவிர டிரெயினுக்குத் தேவையே இல்லாதவன், எதற்காக பீச் ஸ்டேஷனில் இருந்து தாம்பரத்திற்கு சீஸன் டிக்கெட் எடுக்கவேண்டும்.
உனக்குக் கொஞ்சம் ஏசுநாதர் சாயல் இருக்கறாப்பல தோணுது என்றார் இந்திரஜித். எல்லோரும் குடித்திருப்பதால் தோன்றுகிறதுபோல என்று நினைத்துக்கொண்டு கண்ணாடியில் மங்கிய ஒளியில் தெரிந்த இந்திரஜித்தைப் பார்த்து முறுவலித்துக்கொண்டான்.
வெட்கம் தாளாமல் வெளியில் போனான். கெஸ்ட் ஹவ்ஸின் மூலை அறையத் தேடிப்போனான். மூடியிருந்த அறையத் தட்டினால், பத்தாங்கிளாஸ் படிக்கையில் போய் பார்த்தபோது, பனியன் வேட்டியில் கதவைத் திறந்ததைப் போல, இரண்டு வருடங்களுக்கு முன்பே போய்விட்டிருந்த கண்ணதாசன் வருவாரா என்று இருந்தது.