ஒரு பெங்களூர் கண்டக்டர் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டதில் இவனைப்போல எத்தனை மெட்ராஸ் கண்டக்டர்கள் வேலையை விட்டுவிட்டுத் தெருவில் அலையப்போகிறார்களோ என்கிற எண்ண ஓட்டத்தில், வணக்கம் என்று வித்தியாசமாக உச்சரித்த குரல் குறுக்கிடவே பக்கவாட்டில் பார்த்தான்.
முகமெல்லாம் சிரிப்பாய் பெரிய பீப்பாய் ஒன்று, பூப்போட்ட சட்டையில் கைகூப்பி வணக்கம் என்றபடி, 'சித்தர்கள் போன்ற ஆன்மீக விடயங்களில் உங்களுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டோ' என கேட்டது.
தலைகால் புரியவில்லை. நீங்கள்... என்று இழுத்தான்.
மலேசியாவிலிருந்து வந்திருக்கிறோம்...
சினிமா ஷூட்டிங் பார்க்கவா என்று நமுட்டுச் சிரிப்புடன் நினைத்துக்கொண்டான்.
சித்தர் பீடங்களைத் தேடிப் பார்த்துவிட்டுப் போகவென்றே வந்திருக்கிறோம் என்றது.
அதற்கும் தனக்கும் என்ன சம்பந்தம் என்பதைப்போல அவன் முகம் இருந்திருக்கவேண்டும்.
காவி... என்று ஜோல்னா பையைச் சுட்டிக் காட்டிக்கொண்டிருந்தது பீப்பாயின் கை.
அதுவா. அது சும்மா என்று சொல்லிவிட்டு, குர்த்தாவிலிருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்தான்.
இந்தாருங்கள் என்று 555 பாக்கெட்டை நீட்டியது சித்தர் பீடம்.
எடுத்துக்கொண்டான்.
லைட்டரை நீட்டி பற்றவைத்தது. கோல்ட்ஃப்ளேக் குடிக்கிற வாய்க்கு 555 மசமசவென மண் போல இருந்தது. என்ன மயிருக்கு இதை இத்தனைப் பணம் கொடுத்து வாங்குகிறார்கள் என்று நினைத்தபடியே, டிரைவ் இன் ராஜன் சர்மாவைப்போல புகையை அலட்சியமாக ஊதியபடியே, 'ஞானவள்ளல் பரஞ்சோதி...' என்று இவன் ஆரம்பிக்கவும்
'நம்ப ஊர் ஞானவள்ளல் சாமிகளைத் தெரியுமா' என்று பரவசத்தில் இன்னும் பெரிதானது மலேசிய முகம்.
'பத்தாம் வகுப்பு படிக்கையில் குண்டலினி கற்றுக்கொள்ளப் போனது' என்றான்.