'நீங்க?' என்றார்.
பெயரைச் சொன்னதும், 'அடடா நீங்களா. உக்காருங்கோ. தோ வந்துடறேன்.' என்று எழுதுவதில் மும்முரமானார்.
சரசரவென அவர் எழுதிக் கொடுத்துக்கொண்டிருந்த தாளை, கணையாழியின் கம்பாஸிடரான சுவாரசிய ஜொள்ளு பெரியவர், வந்து நிற்பதும் வாங்கிக்கொண்டு போவதுமாக இருந்தார்.
எப்படி எழுதுகிறார் என்று பிரமித்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தான். ஒரே ஒருமுறை மட்டும் உள்ளே போனவரை அழைத்து, கொடுத்த பேப்பரின் இறுதியை ஒருதடவை பார்த்துக்கொண்டு கொடுத்துவிட்டார். எப்படி, வடையைத் தட்டி வாணலியில் போடுவதைப்போல, துளிகூட சிரமமில்லாமல், இப்படி ஒருவரால் எழுதிக்கொண்டே போகமுடியும் என்று, எழுத்தில் இருக்கிற சரளத்தைப் போலவே அவர் எழுதுகிற விதத்தில் இருந்த ஓட்டத்தையும் பார்க்கப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அந்த மாத அத்தியாயத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, 'வாங்கோ காபி சாப்பிடலாம்' என்றார். அதுகூட நளபாகத்தின் தொடர்ச்சியோ என்பதைப்போல கிறங்கடித்தது.