ஜானகிராமன் எல்லாம் வேலை பார்த்து ஓய்வுபெற்ற பின்பும் எழுதிக்கொண்டுதானே இருந்தார். அவரை விட எழுத்தில் சாதித்தவர் என்று எவ்வளவு பேரைச் சொல்லிவிடமுடியும் என்றும் ஒருபுறம் தோன்றிற்று. ஆபீசில் வேலைபார்த்துக்கொண்டே எழுதுகிறார் என்பதால்,ஞாயிற்றுக்கிழமை எழுத்தாளர் என்று தி.ஜாவை கிண்டலடித்த, முழுநேர லெளட்ஸ்பீக்கரான ஜெயகாந்தனைவிட கலாரீதியாக ஜானகிராமன் சாதித்தது ஒப்பிடமுடியாத உயரமல்லவா.
அவருக்கு எவ்வளவு வண்ணமயமான காவிரிக் கரையும் தஞ்சாவூரும் இருந்தன. எவ்வளவு விதவிதமான அசலான பாத்திரங்கள். நமக்கு என்ன இருக்கிறது. திரும்பத் திரும்ப அப்பா அம்மா வீடு இதைவிட்டால் வேறு என்ன இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு எவ்வளவு எழுதிவிடமுடியும். ஆயுளுக்கும் எழுத கண்டிப்பாக இவை போதாது. அசதாரணமான அனுபவங்கள் இல்லாமல் அசாதாரணமாக எழுதி சாதிக்கவேமுடியாது.
சரியாகச் சொன்னால், போனமாதம் போனது வெறும் ஒன்றரை நாட்கள் என்றுதானே சொல்லவேண்டும். அதிலேயே எவ்வளவு மனிதர்களைப் பார்க்கமுடிந்தது. ஆபீஸை விட்டால் அறை, அறையை விட்டால் ஆபீஸ் என்று இப்படியே போய்க்கொண்டிருந்தால் என்ன கிடைத்துவிடும். சூட்டோடு சூடாக இப்போது போகாவிட்டால் எப்போதுமே போகமாட்டோம் என்று அவனுக்குத் திட்டவட்டமாகத் தெரிந்துவிட்டது.