04 March 2023

அடித்துவிடுபவர்களுக்கு அடித்துவிட்டுக்கொண்டு இருக்காதீர்கள்

இது சாரு உதிர்த்திருக்கும் இன்றைய முத்து. 


சாரு குறிப்பிடும் வில்லிவாக்கத்தில் நடந்த இலக்கு கூட்டம், 1982ல் (ஜனவரி 1, 2 தேதிகள் என்று நினைவு) ஒரு மாடியில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, படிக்கட்டிற்குக் கீழே நின்று தட்டிகளை ஏந்திக்கொண்டு வீராச்சாமி தலைலையில் மகஇகவினர் கோஷமிட்டனர்

இந்தக் கூட்டத்திற்கு சாருவும் வரவில்லை. சி சு செல்லப்பாவும் வரவில்லை. மகஇகவினர் யாரும் யாரையும் மறிக்கவுமில்லை

தமிழவன் போன்ற இலக்கு அமைப்பாளர்கள் தவிர சுரேஷ்குமார இந்திரஜித் விக்ரமாதித்யன் சுகுமாரன் தமிழினி வசந்தகுமார் மாலன் என்று பலரும் வில்லிவாக்கம் இலக்கிற்கு வந்திருந்தனர்


பெங்களூர்காரியான (சிகரெட் பிடிக்கிற) செலின், 1982 இலக்கு கூட்டத்தில் எடுத்த இந்தப் படத்தில் 21 வயதுப் பையனாக இருப்பது நான். எனக்குப் பின்னால் இருப்பது, அன்றைய எழுத்துலக நயந்தாராவாக இருந்த சிவசங்கரி. வணிக எழுத்தைத் திட்டிப் பேசிக்கொண்டிருக்கிறேன்.

***

1985 திருவல்லிக்கேணியில் நடந்த இலக்கு கூட்டத்தில்தான் சி சு செல்லப்பா யாருக்கும் புரியாமல் பேசிக்கொண்டே இருக்கிறார் என்று இரும்புக் கதவைத் தடதடவென்று தட்டி அவர் பேச்சை நிறுத்த முயன்றவன் சாருதானே தவிர, நக்ஸலைட்டுகள் என்று ஃபேக் ஐடிக்களுடன் இணையத்தை மிரட்டிக்கொண்டிருந்த வினவு கோஷ்டிக்குப் பின்னால் இருந்த மகஇக அங்கு வரவேயில்லை. சாரு பழமாகி, ரொம்பக் கனிந்து அழுகிப்போய்விட்டிருப்பதால் 82ஐயும் 85ஐயும் போட்டுக் குழப்பிக்கொண்டுவிட்டிருக்கிறான் பாவம். 


இவனுக்கு 9 வயது சிறியவரான ஜெயமோகன் பிறந்ததிலிருந்தே இப்படித்தான் நினைவிலிருந்து எழுதுகிறேன் என்கிற பெயரில் தப்பும் தவறுமாய் குப்பை லாரிபோல கொட்டிக்கொண்டே இருக்கிறார். இதைத்தான் அபாரமான நினைவாற்றல் என்கின்றன விஷ்ணுபுர அடிமைகள்.


அந்தக் கூட்டத்தில் சி.சு. செல்லப்பாவின் அராஜகக் கழுத்தறுப்பை சாரு மட்டுமில்லை பலரும் எதிர்த்தனர் நான் விக்ரமாதித்யன் உட்பட. 


எனக்கு இரண்டு வயது இளையவரான ஜெயமோகன், இப்போது சினிமாவுக்கு எழுதி இலக்கிய சேவை ஆற்றிக்கொண்டு இருப்பதைப்போல, 1985ல் கல்கி குமுதத்தில், இப்போது போலவே நெகிழ்ச்சியான மெலோடிராமா கதைகளை இலக்கியம் என்கிற லேபிள் இல்லாமல் எழுதிக்கொண்டிருந்த காலம் அது. இலக்கியத்தில் இன்னும் பிறந்திருக்கவெ இல்லை. இதற்கு அடுத்த வருடம் 1986ல்தான் சுந்தர ராமசாமியையே பார்க்கப்போகிறார் ஜெயமோகன். 


1985ல் நடந்த இந்த இலக்கு கூத்தை கவிஞர் விக்கிரமாதித்யன் நம்பி என்கிற எம் டி முத்துக்குமாரசாமியின்ன் கட்டுரையிலும் காணலாம். 


இலக்கு கூட்டம்தான் நான் பார்வையாளனாக, மாணவனாக, இளம் எழுத்தாளனாக பங்கேற்கும் முதல் கூட்டம். திருவல்லிக்கேணியில் ஏதோ ஒரு மண்டபத்தில் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. சி.சு.செல்லப்பாவின் கட்டுரை முதல் அமர்வில் முதல் கட்டுரை. சி.சு.செல்லப்பாவின் குரல் அடைத்துக்கொண்டிருந்தது; கர கரவென்று என்ன வாசிக்கிறார் என்றே யாருக்கும் பிடிபடவில்லை. விமலாதித்த மாமல்லன் எழுந்துபோய் செல்லப்பா நான் உங்கள் கட்டுரையை வாசிக்கிறேனே என்றார். செல்லப்பா நொடியில் அதை மறுத்துவிட்டார். கரகர லொட லொடா வென தொடர்ந்து வாசித்தார். சாரு நிவேதிதா துள்ளி எழுந்துபோய் மண்டபத்தின் வாசற்கதவை சுவரில் டொம் டொம் என்று அடித்தார். சாரு கதவை சுவரில் அடிக்க அடிக்க செல்லப்பா குரலை அதற்கு நிகராய் உயர்த்தி கர கர லொட லொடாவைத் தொடர்ந்தார். ஒன்றுமே நடக்காதது போல கூட்டத்தினர் செல்லப்பாவினை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். புதியவனான நான் வெல வெலத்துபோய் பக்கத்து இருக்கையில் பெரிய கருந்தாடியுடன், வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையில் காலை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த விக்கிரமாதித்யனிடம் அறிமுகம் செய்துகொண்டேன். விக்கிரமாத்தியனிடம் இப்படி கலாட்டா செய்கிறாரே பெரியவரை சாரு என்றேன் பம்மி பம்மி. நானும் மாமல்லனும் பண்ணாத கலாட்டாவா இது என்ன கலாட்டா என்றார் நம்பி. 


*** 


இதையே, இன்னும் விரிவாக உள் விவகாரங்களோடு, 1985ல் வெளியான மீட்சி 18ஆம்இதழில் இருக்கிற, 'புதுக்கவிதையும் புதுப்பிரக்ஞையும்' என்ற தலைப்பில் இலக்கு தன்னுடைய ஐந்தாவது கருத்தரங்கை கடந்த மே 4, 5, தேதிகளில் சென்னையில் நடத்தியது என்று தொடங்குகிற கவிதை பற்றி ஒரு கருத்தரங்கு என்கிற - ஆர். சிவகுமாரின் கட்டுரையில் காணலாம்




ஆளுமைகளாகக் கொண்டாடப்படுகிற எழுத்தாளர்கள் எவ்வளவு விருப்பு வெறுப்புகளுடன் இருக்கிறார்கள் என்பதன் குறுக்குவெட்டுத் தோற்றத்திற்கு சிறிய எடுத்துக்காட்டு: 

மாலை அமர்வின் தலைப்பு 'புதுக்கவிதையும் புது அரசியல் பிரக்ஞையும்'...

இந்த அமர்வில் சில சூடான விவாதங்கள் நடந்தன. இலங்கை இனப்படுகொலைகள் பற்றிய சிவராமின் (பிரமிள்) சமீபத்திய கவிதை ஒன்றைப் படித்துக்காட்டி இதை ஏன்  எந்தக் கட்டுரையாளரும் குறிப்பிடவில்லை என்று கூறி விமலாதித்த மாமல்லன் விவாதத்தை ஆரம்பித்தார். இந்த விவாதத்தில் சில பெரிய தலைகளின் Prejudices தெளிவாக வெளியாயிற்று. எல்லாரும் மாமல்லனை உட்காரவைப்பதில்தான் ஆர்வம் செலுத்தினார்களே ஒழிய அவர் எழுப்பிய கேள்விகளுக்கு உருப்படியான பதில்கள் யாராலும் தரப்படவில்லை. ஞானி ஓட்டம், பாய்ச்சல் என்று கவிதைக்கு இலக்கணம் சொல்லி, தன் உதாரணம் (சிவராமின கவிதையைப் பொறுத்தவரை) தான் சொன்ன கவிதை இலக்கணத்துக்கு எதிராக இருந்ததைக் கூடப் புரிந்து கொள்ளாமல் Same side goal போட்டுக்கொண்டார். சிவராமின் கவிதையில் ஒரு வரி சிவதனுசு மாதிரி உள்ளது என்று மாமல்லன் உதாரணத்துக்கு சொன்னதை 'சிவதனுசு' சிவராமின் கவிதையில் வருவதாக நினைத்துக் கொண்டு தமிழவன், சிவதனுசு இன்று யாருக்குப் புரியும் ? என்று கேட்டார். வார்த்தைகள் தவறாகக் கூடக் காதில் விழுந்திருக்கலாம் என்று நீங்கள் சொல்லலாம். சிவராம் என்ற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் இவர்கள் நிலைதடுமாறுவதை நேரில் காண முடிந்தது. இதே மாதிரித்தான் இன்னோரு குழு ஞானக்கூத்தன், தமிழவன் என்ற வார்த்தைகளைக் கேட்டவுடன் நிலை தடுமாறும். மேற்கத்திய எழுத்துக்களைப் படிக்கும்போது தமிழில் உள்ளது ஒன்றுமேயில்லை. இதற்கே இத்தனை போட்டி பொறாமை இருப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை.


இரண்டாம் நாள் மாலை அமர்வு முடிந்தபின் இரண்டு நாட்களும் கருத்தரங்கில் கலந்து கொண்ட சி. சு. செல்லப்பாவை கருத்துரை சொல்லக் கூப்பிட்டது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்பதை அவரே நிரூபித்துக் கொண்டார். நீங்கள் சொன்னதெல்லாம் என்ன அரசியல் கவிதைகள், பாருங்கள் .பிச்சமூர்த்தியின் அரசியல் கவிதைகளை என்று சில தாள்களிலிருந்து யாருக்கும் புரியாத குரலில் . பி.யின் கவிதைகளை நீண்ட நேரம்கேட்பவர்களைப்பற்றிக் கவலைப்படாமல் வாசித்துக்கொண்டிருந்தார். நவீன தமிழ்க்கவிதைக்கு வேறு யாரையும் விடவும் அதிக சேவை புரிந்த செல்லப்பா இப்படிப் பிடிவாதமாக நடந்து கொண்டு தனக்கும் .பி.க்கும் அபவாதம் தேடிக்கொண்டதைப் பார்க்க வேதனையாக இருந்தது. அரசியல் கவிதைகள் என்றெல்லாம் தனியாக ஒன்றும் இல்லை என்று . நா. சு. மிக நாகரிகமாக ஐந்து நிமிடங்களில் தன் பேச்சை முடித்துக்கொண்டார்.


***

காசு பணம் பெயர் புகழ் என்று எதற்கும் ஆசைப்படாத, ஆசைப்பட்டாலும் கிடைக்காத, ஊர் பேர் தெரியாத அன்றைய சிறுபத்திரிகைச் சூழலிலேயே இப்படித்தான் இருந்திருக்கிறார்கள் என்றால் சினிமா பிஸினஸையும் புக்கு பிஸினஸையும் வெற்றிகரமாக நடத்திக்கொள்ள தங்கள் பிம்பங்களை ஊதிப் பெரிதாக்கிக் காட்டிக்கொள்ளும் இப்போது உங்களுக்குக் கிடைத்திருக்கிற சொத்தைகளான கோனங்கியும் ஜெயமோகனும் சாருவும் உள்ளூர எப்படி இருப்பார்கள் என்பதைப் புரிந்துகொண்டு பல்லக்குத் தூக்குவதை நிறுத்தி சுயமாக சிந்திக்கப் பழகுங்கள்.


இந்த வரலாறையே இவ்வளவு சொதப்பலாய் ழுதுகிற சாரு, அசோகா, ஆபிரகாம் பண்டிதர், தியாகராஜா என வரிசையாக வரலாற்று நாவல்களாக எழுதப்போவதாய் சொல்லிக்கொண்டிருப்பது எவ்வளவு பெரிய நகைச்சுவை.


இப்படி அடித்துவிடுவதையே பிழைப்பாகக்கொண்டு, கோணங்கி சாரு ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் திரிகிறார்கள் என்றால், இவர்களுக்கு அடித்துவிடுவதையே தொழிலாகச் செய்துகொண்டு மானக்கெட்ட கும்பலாய் இணையத்தில் நீங்கள் திரிந்துகொண்டு இருக்கிறீர்கள்.  


சும்மா ஊரைச் சுற்றி வந்த வெத்துவேட்டான கோணங்கியை பெரிய இலக்கிய மாஸ்டர் என்று பில்டப் கொடுத்து மகுடி ஊதிக்கொண்டு ஒரு கும்பல் இளைஞர்களை அவனுக்குக் கூட்டிக்கொடுத்ததுக் கொண்டிருந்தது  வெளிச்சத்துக்கு வந்து உலகமே கைக்கொட்டிச் சிரிக்கிறது. 


இளைஞர்களே, எழுத்தாளனோ அரசியல்வாதியோ எவனையும் கண்மூடித்தனமாக பின்பற்றாதீர்கள். அரசியல் கட்சி கலை இலக்கியம் நாடகம் புரட்சி என்று அடித்துவிடுபவர்களுக்கு அடித்துவிட்டுக்கொண்டு அலையாதீர்கள். அழியாதீர்கள்.