பஸ் வளைந்தும் நெளிந்தும் மேலே ஏற ஏற, ஏண்டா இங்கே வந்தோம் என்று நொந்துகொள்ளும்படியாக, எந்த நிமிஷமும் வாந்தி எடுத்துவிடப்போகிறோம் என்பதைப்போல, வயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்தது.
வசதியின்மை காரணமாக, பள்ளிக்காலத்தில் நல்லது கெட்டதுக்கு என்று மெட்ராஸுக்கு வருவதே அபூர்வம் என்றாலும் வரும்போதெல்லாம் தவறாமல் வந்துகொண்டு இருந்தென்னவோ வாந்திதான். டீஸல் வாடையே தனக்கு ஆகாது, அலர்ஜி என்பது தெரியவரவே பெரியவனாகவேண்டி இருந்தது.
மேலும் கீழுமாகக் காவி ரூபமாய் இருந்தபடி வாந்தியெடுப்பது, சாதாரணமாக எடுப்பதைவிடக் கண்றாவியாக, ரொம்பக் கேவலமாக இருக்குமே என்கிற கவலை வேறு சேர்ந்துகொள்ள, ஜன்னலுக்கு வெளியில் தலையை நீட்டி, ஆஸ்துமாக்காரனைப்போல வாயைத் திறந்து மூச்சு வாங்கிகொண்டிருப்பதை, ஆஹா ஆஹாவென்று இயற்கையைக் கடவுள் ரூபமாய்க் கண்டு, இளம் துறவி மெய்சிலிர்த்து ரசிப்பதாய் பஸ்ஸிருந்தவர்கள் நினைக்கும்படியாக படாதபாடுபட்டு சமாளித்து, ஊட்டிக்கு வந்து இறங்கியது நினைவுக்கு வர உள்ளூர சிரித்துக்கொண்டான்.
கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரோ இல்லையோ. ஆனால், எதிரில் இருட்டுக்குள் உறைந்துகிடப்பதைப்போல இருந்த ஏரிக் காட்சி, உண்மையிலேயே வாயைப் பிளக்கவைப்பதாகத்தான் இருந்தது.