கிருபானந்தவாரியாரின் பேச்சு, சிந்திப்பவர்களுக்கானதில்லை; பெண்களுக்கும் சிறுவர்களுக்குமானது என்று பாண்டிச்சேரி கம்பன் கலையரங்கின் வெளியில் இருந்த சிமெண்டு பெஞ்சில் ஒற்றைக் காலை மடித்துப் போட்டுக்கொண்டு தமிழாசிரியர் திருமுருகன் சொன்னது நினைவுக்கு வந்தது. அதில் இருந்த இன்னொரு விசேஷம்,அருணகிரி என்கிற அவனுடைய இன்னொரு தமிழாசிரியர்தான் புதுவை கம்பன் விழாவை முன்னின்று நடத்திக்கொண்டு இருந்தவர் என்பதுதான்.
எழுத்து இலக்கியம் எல்லாம், சொல்வதை சொந்தமாக சொல்ல முனைவது. தனக்கு நிகழ்ந்த பிரத்தியேகமான அனுபவத்தை, படிக்கக்கூடிய தனி மனத்திற்குத் தணிந்த குரலில் சொல்லி அவனை சுயமாக யோசிக்கச் செய்வது. மேடைப்பேச்சு ஏற்ற இறக்கங்களுடனான காதைக் கிழிக்கும் காட்டுக் கூச்சல். வெற்று ஆர்பாட்டம்.
போட்டிகள் மூலமாக, பெரிய மேடைப்பேச்சாளனாகிவிடவேண்டும் என்று, கல்லூரி முதலாண்டில் பஸ்ஸுக்காகக் காத்திருக்கையிலெல்லாம் எத்தனைப் பாடல்களை எத்தனைமுறை சொல்லிச்சொல்லிப் பார்த்து நெட்டுரு போட்டுக்கொண்டு இருந்திருக்கிறோம் என்பதை நினைக்க நினைக்க, எவ்வளவு நேரத்தை வீணடித்திருக்கிறோம் என்று வெட்கமாக இருந்தது.