சிறந்த எழுத்தாளர்கள் அனைவருமே, தமக்கென இருக்கிற தனித்த பார்வையுடன், எவ்வளவு வித்தியாசமாக, எத்தனைக் கடுமையான கருத்தை, நுட்பமான கருப்பொருளைக் கையாண்டாலும் ஆர்பாட்டமின்றி ஒரே மாதிரி, அமைதியாகவே எழுதுகிறார்கள்.
குரூரத்தைக் காட்டுகிறேன் பேர்வழி என்று சாதாரண எழுத்தாளன், பக்கம் பக்கமாக எழுத்தில் கதறி, கண்ணீரை வரவழைக்க, படிப்பவன் கண்ணுக்குள் விரலைவிட்டுக் குத்திக் கலக்கிவிடப் பிரயாசைப்படக்கூடிய காட்சியை
'கீறிக் கிழித்துத் திறக்கப்பட்டுக் கிடந்த அவர் மனைவியின் உடல்.'
என்று ஒரே வாக்கியத்தில் எவ்வளவு சாதாரண வார்த்தைகளில் கண்ணெதிரே கொண்டுவந்துவிடுகிறார் மாண்டோ.
இலக்கியப் போர்வையில் இருக்கிற வணிக எழுத்தாளன், நிகழ்ந்த சம்பவத்தின் குரூரத்தை விலாவாரியாக எழுதுவதில் நாக்கைச் சப்புக்கொட்டித் திளைத்துக்கொண்டிருக்கையில் இலக்கிய எழுத்தாளன் அனாயாசமாக அதை, ஒரு கோடு கிழிப்பதைப்போல தீற்றிவிட்டுப் போய்விடுகிறன்.
மாண்டோ மறைந்தே அறுபதெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. 1948ல் எழுதப்பட்ட கதை இது. எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதையில் காலம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்தக் கதையில் வெளிப்படையாகச் சொல்லாமல் தவிர்க்கப்பட்டிருப்பது இதுமட்டுமல்ல;இறுதி உட்பட நிறைய இருக்கின்றன.