பரமஹம்ஸர், முல்லா நஸ்ருதீன் குட்டிக்கதைகள் பெரும்பாலும் தனிமனிதர்களைச் சார்ந்தவையாக இருக்கும். அதிலும் முல்லா கதைகளில் சுய எள்ளலும் சேர்ந்துகொள்வதால் பாமரர்களும் ரசிக்கும்படி சுவாரசியமாக இருக்கும். எளிய கதைகளில் அரிய உண்மைகள்.
இதுவும் குட்டிக்கதை போலத்தான் தொடங்குகிறது. தர்க்கரீதியாக, பகுதி பகுதியாக வளர்வதில் - பரமஹம்ஸரின் கதைகள் சொல்லப்பட்டிருப்பதிலிருந்து வேறு தளத்தில் அர்த்தப்படுவதைப்போல - நேர்மை திருட்டு என்கிற இரண்டை எடுத்துக்கொண்டு ஒருவனை மையமாக வைத்துக் கதை சொல்வதைப்போல மனிதர்களின் இயல்பை, எதிர்வினைகளை வெளிக்கொணர்கிறது. நீதியை போதிக்கும் குட்டிக் கதைகளைப் போலல்லாது, நேர்மை நீதி சட்டம் ஒழுங்கு எல்லாம் யாரால் நிறுவப்பட்டு நடைமுறையில் யாருக்காக இருக்கின்றன என்பதைப் போகிறபோக்கில் சொல்லிவிட்டுப்போகிறது.
இத்தனைப் புத்தகங்களைப் படித்திருக்கிறோம் என்று காட்டிக்கொள்வதற்காகவும் படித்தவற்றின் எண்ணிக்கையை ஏற்றிக்கொள்வதற்காகவும் படிப்பது, உள்ளே ஒன்றும் ஒட்டாமல் பெயர் உதிர்த்துப் பெரிய ஆள் போல தோற்றமளிக்கத்தான் பயன்படும். உள்ளூர உறுதியாகவேண்டும் என்றால் - சிறுவயதில் படித்ததுதானே என்று அலட்சியப்படுத்தாமல் - படித்ததையே இடைவெளிகளில் திரும்பப் படிக்கையில்தான், அவரவர் வயதுக்கும் அனுபவத்துக்கும் பக்குவத்துக்கும் ஏற்ப அவை விரிவதை உணரமுடியும். மறுவாசிப்பில் காலாவதியாகிவிடாமல் இப்படிக் காலத்துக்கும் நிற்பவையே உயர்ந்த எழுத்தாகக் கொண்டாடப்படும். அந்த நேரத்துக்குக் குறளிவித்தை காட்டிவிட்டுப் போகிறவற்றிற்கு கிடைக்கிற முக்கியத்துவம் - விற்பனையைத் தவிர வேறில்லை.