வரச்சொல்லி உள்ளே அழைப்பார். எப்படிப் போய் உட்காரவேண்டும். கைகளை எப்படி வைத்துக்கொள்ளவேண்டும் என்று என்னென்னவோ யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு,திடுப்பென அவரே எதிரில் வந்து உட்கார்ந்ததும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
இதுபோன்ற தருணங்களில் எல்லோரும் செய்வதையே அவனும் செய்தான். ஹிஹி என்று அசட்டுத்தனமாக இளித்துவைத்தான். அவனுடைய திணறலைப் புரிந்துகொண்டவராக, 'எங்கேந்து வரீங்க' என்று அவரே ஆரம்பித்துவைத்தார்.
அதுபோதும் என்று, தண்ணீர் டிரம்மைத் தள்ளிவிட்டதைபோல தடதடவென்று கொட்ட ஆரம்பித்துவிட்டான். இடையிடையில் முறுவலித்தபடி அவர் கேட்டுக்கொண்டிருந்தார். ராமசாமி ஈஸ் தி பெஸ்ட் கான்வர்சேஷனிஸ்ட் என்று க்ரியா ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறாரே. இவரென்ன நம்மைப் பேசவிட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அச்சுபிச்சென உளறிவிடக்கூடாதே என்கிற பயத்தின் சரடு உள்ளே ஓடிக்கொண்டிருந்தது. அதைக் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளாமல் அவன்பாட்டுக்கும் பேசிக்கொண்டிருந்தான்.
மோர் வந்தது. வேண்டாம் என்று கையமர்த்தினார். வழி விசாரித்துக்கொண்டே வரும்போது டீ குடித்தது. வயிறு காய்ந்துகொண்டிருந்ததால் பெரிய லோட்டாவில் இருந்த மோரை எடுத்து, ஒரே மடக்கில் குடித்துவிட்டான். அதற்குப் பசி மட்டுமே காரணம் என்றும் சொல்லிவிடமுடியாது. மேல் வேஷ்ட்டியில் வாயைத் துடைத்துக்கொள்ளும்போதுதான் பரக்காவெட்டி போல குடித்துவிட்டோமே என்று பதற்றமாக இருந்தது. கொஞ்சம் நிதானமாகக் இரண்டு மூன்று தடவையாகக் குடித்திருக்கலாமோ என்று தோன்றிற்று. கூச்சத்தைப் பேச்சில் மறைத்துக்கொள்ளப் பார்த்தான்.