சற்று நேரம் கழித்து, 'ராமசாமி, நீங்க ஏன் எழுதறதைப் பத்தி எழுதக்கூடாது. என்னை மாதிரி எத்தனையோ பேருக்கு யூஸ்ஃபுல்லா இருக்குமே' என்றான்.
உள்ளங்கையின் அடிப்பகுதி கட்டிலில் பதிந்திருக்க, படமெடுத்த பாம்புபோல இருந்த கையின் விரல்கள் தனித்தனியே பிரிந்திருக்க, சுட்டுவிரல் மட்டும் காற்றில் எழுதிக்கொண்டிருந்ததே தவிர பதிலில்லை.
'தன் சுனையைத் தானே தேடும் முயற்சினு, எழுத்தைப் பத்தி ஜி. நாகராஜனோட கண்டதும் கேட்டதும் முன்னுரைல சொல்லியிருப்பீங்க. ரெண்டு முன்னுரைகளையும் சேத்துப் படிச்சுப் பாத்தா, நீங்க சொல்ல வரது இன்னும் நல்லா புரியும்னு இப்ப தோணுது. இருந்தாலும் இன்னைக்கு இதையெல்லாம் பேசறவரா நீங்க மட்டும்தான் இருக்கீங்க. கதை எழுத நிறையபேர் இருக்காங்க. ஆனா எழுதறதைப் பத்தி எழுதத்தான் யாருமே இல்லை'.
'அசோகமித்திரன்கிட்ட அவர் எப்பையோ எழுதின கதையைப் பத்திப் பேசினா, ஆமா அன்னைக்கு அது அவனுக்குப் பெரிய கஷ்டமா ஆயிடுத்து. ரொம்ம்ப கஷ்டம் சார்னு, அப்பதான் அந்தக் கதையை எழுதிக்கிட்டு இருக்கறாப்பல சொல்லி, நைஸா பேச்சை மாத்திடுவார்'.
'எனக்கென்னவோ, நிறைய ரைட்டர்ஸ் பிரமாதமா கதை எழுதற அளவுக்கு, எப்படி எழுதறாங்கனு தெரியாம, அவங்களையும் மீறி நல்லா எழுதிடறாங்களோனு தோணுது' என்றான்.