தம்முடைய இயல்பான கட்டுக்கோப்பை உதறிவிட்டு, அவரையும் அறியாமல் முகத்தில் வெளிப்படையாய் மகிழ்ச்சிப் பொங்க, சற்றே உரக்கப் பேசிக்கொண்டு இருந்தார். அறைக்கு வந்த கமலா மாமியிடம், 'தெரியுமா, இவர் நகுலனைப் பாக்க திருவணந்தபுரம் போகலையாம். கன்யாகுமரியைக் கூட பாக்காம, மெட்ராஸுக்குத் திரும்பிப்போறார்' என்று குதூகலத்துடன் குழந்தைபோலச் சொல்லிக்கொண்டிருந்தார் சுந்தர ராமசாமி.
இடையிலேயே முடித்துக்கொண்டு அவன் திரும்புவதில் இவருக்கென்ன இப்படியொரு மகிழ்ச்சி என்று தெரியாததைப்போல கள்ளத்தனமாக கேட்டுக்கொண்டது மனம். 'போதும்' என்று அவரோடு முடித்துக்கொண்டு, அவன் கிளம்புவதில்தான் அவர் அவ்வளவு மகிழ்கிறார் என்பது அவனுக்குத் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. அறிவுரை என்று எதையும் சொல்லாது அவனாகவே திரும்பும்படிச் செய்தது அவர் திட்டமிட்டுப் பண்ணியதாக இருக்குமோ. இல்லையென்றால் அவருக்கு ஏன் இவ்வளவு மகிழ்ச்சி. அல்லது தானாக நடந்ததை அவர்மேல் ஏற்றி நினைத்துக்கொள்ள நம் மனம் தூண்டுகிறதா. எது எப்படி இருந்தாலும் உள்ளே, படாலென ஏதோ திறந்துகொண்டுவிட்டதைப்போல இருந்தது. நிறைவு எக்களிக்க, எக்மூரில் வந்து இறங்கும்வரை ரயில் பிரயாணம் முழுக்க மனம் ததும்பிக்கொண்டிருக்க மிதந்து கொண்டிருப்பதைப் போன்ற உணர்வே இருந்தது. அதுவரை தான் அவ்வளவு மகிழ்ச்சியை அனுபவித்ததேயில்லை என்பதைப்போல இருந்தது.
'என்ன செய்யறே'.
என்ற ராஜனின் கேள்வியில் திடுக்கிட்டு விழித்தான்.
'ம்'.
'டேபிள்ல என்ன பண்ணிக்கிட்டு இருக்கே'.
'என்ன சொல்றே' என்று அவனிடம் சொல்லி சமாளித்தாலும் கூச்சத்துடன் படக்கென கையை டேபிளுக்கு அடியில் இழுத்துக்கொண்டு, வலக்கைச் சுட்டு விரலையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு இருந்தான். முகத்தில் லேசான முறுவல் பூத்தது.