என்னய்யா மெஸ் இது. போவும்போது, தகடாட்டம் பட்டையா வருமோனு பயப்படவேண்டிய அளவுக்கு மெல்லிசா தோசை வாக்கறாங்க உங்க ஊர்ல, என்று அறைவாசிகளிடம் அங்கலாய்க்கிற அளவிற்கு ஆகிவிட்டிருந்தான்.
அவர்களோ, சார் செம காமெடியா பேசறாரில்லே, என விதந்து, சினிமாவுக்கு வசனமெழுதப் போனா நிச்சயமா பெரியாளா ஆகிடுவாரு என்று அவன் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டார்கள்.
இந்த அன்றாடத்தின் சலிப்பை, உள்ளார்ந்த புகைச்சலைக் கதையாக எழுதவேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. சரியான சம்பவமாக மாட்டாமல் எப்படி எழுதுவது என்று பிடிபடவில்லை. இதைத்தான் ஜானகிராமன் கதை உட்காருவது என்று சொல்கிறாரோ என்று தோன்றிற்று. சலிப்பை சுவாரசியமாக எதை வைத்து எப்படி எழுதுவது என்று மனம் ஓயாமல் உருட்டிக்கொண்டே இருந்தது.
அந்த ரொட்டீனுக்கு இடையில் கொஞ்சம் ஆறுதலாகவும் சமயத்தில் எரிச்சலூட்டும்படியாகவும் இருந்தது தேவிபாரதிதான். அவன் எப்படி வந்து அறிமுகப்படுத்திக்கொண்டான் என்பதே நினைவில் பதியாதபடிக்கு சுந்தர ராமசாமி சொல்வதைப்போல 'புகைமூட்டமாக' இருந்தது.
அவன் ஆபீஸுக்குதான் தேடி வந்திருக்கவேண்டும். ராஜசேகரன் என்கிற தேவிபாரதி பாவமாய் அவனைவிடவும் ஒல்லியாய் இருந்தான். அவனை இன்னும் நோஞ்சானாய்க் காட்டியது, அவன் நிறமும் ஒட்டிய தேகமுமாய்த்தான் இருக்கவேண்டும்.