28 June 2023

ஆபீஸ் அத்தியாயம் 56 அவரவர் உலகம்

ராமசாமியைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து, மன விரிவே சிந்தனையை விரிக்கும். சுயசிந்தனையே பிரத்தியேகப் பார்வையைக் கொடுக்கும். தனித்துவப் பார்வையே ஆளுமையை உருவாக்கும். அதிலும் இருக்கிற சட்டகத்திற்குள் அடங்காத ஆளுமையாக உருவெடுக்க எதிரெதிர் கருத்துகளுக்கு முகம் கொடுத்து எழுந்து வரவேண்டும் என்று என்னென்னவோ எண்ணங்கள் தோன்றிக்கொண்டிருந்தன


ஆனால், அவள் அப்படித்தான் பற்றி சுந்தர ராமசாமி இப்படிச் சொன்னார் என்று சொன்னதும் படாரென ருத்ரைய்யா போட்ட ஒரே போடில் அவன் ஆடிப்போய்விட்டான். தருமு சிவராமு உட்பட, சுந்தர ராமசாமியை போகிற போக்கில் இவ்வளவு சாதாரணமாக யாரும் அடித்து அவன் பார்த்ததில்லை என்பதால் பேச்சு மூச்சற்று அவர் ஆபீசில் அமர்ந்திருந்தான்


நாகர்கோவிலில் இருந்து திரும்பிவந்து மெட்ராஸில் இருந்த நான்கைந்து நாட்களில் ஒருமுறை, மந்தைவெளியில் திறந்தவெளி குப்பைக் கூளத்திற்கு நடுவில் பெரிய கட்டடத்தில் இருந்த  ருத்ரையாவின் ஆபீசுக்குப் போயிருந்தான். அவன் போனது என்னவோ,ஜோதிவிநாயகத்தைப் பார்க்கப்போனபோது நாகலாபுரத்தில் அவள் அப்படித்தான் ஓடிக்கொண்டு இருந்ததையும் அந்தக் கொட்டகைச் சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் டைரக்‌ஷன் வி சசி என்று பிட்டு படம்போல அச்சிடப்பட்டிருந்த அநியாயத்தையும் சொல்வதற்காகத்தான். அவரைப் போய்ப் பார்க்க அது ஒரு சுவாரசிய முகாந்திரமாக இருக்கும் என்றுதான் அதைத் தூக்கிக்கொண்டு போனான். ஆனால், அவன் ருத்ரையாவிடம் பேச்சை ஆரம்பித்ததென்னவோ அவள் அப்படித்தானைப் பற்றி சுந்தர ராமசாமி சொன்னதை வைத்துதான்


ஆபீஸ் அத்தியாயம் 56 அவரவர் உலகம்