வேப்பெண்ணெய் கரப்பான்பூச்சிக்கு நன்கு கேட்கிறது.
கரப்பான்பூச்சி இல்லாத சமையல்கட்டே இருக்காது என்கிற அளவுக்கு விளக்கணைத்த வீட்டின் இருட்டில் சமையல் மேடை முழுக்க, நசநசவென நிறைந்திருப்பவை கரப்பான்பூச்சிகள்.
மூன்று நாள்களாய், இரவு படுக்கும்முன், கால் 'மக்' நீரில் இரண்டு மூன்று சொட்டு வேப்பெண்ணெய்யைக் கலந்து நன்கு கலக்கிவிட்டு, அதைக்கொண்டு மேடையைத் துடைத்துவிட்டுப் படுக்கிறோம். இரவில் விளக்குப் போட்டுப் பார்த்தால் கரப்பில்லை; புள்ளிப் புள்ளியாய் தென்படுகிற கரப்புக் குட்டிகள் கூடத் தட்டுப்படுவதில்லை.
பால்கனித் தோட்டத்தை நான்கைந்துத் தொட்டிகளுடன் தொடங்கிய புதிதில் 13 டிகிரி நார்த்தில் வாங்கிய TERRA NOURISH, இலைகளை அடிக்கிற பூச்சிகளுக்கு நன்றாகக் கேட்கிறதே, இதைச் சமையல் கட்டில் பயன்படுத்திப் பார்த்தால் கரப்புக்கும் கேட்குமோ என்று தற்செயலாய் தோன்றிய எண்ணத்தால் ஆரம்பித்தேன். சில சொட்டுக்கள்தாம் என்பதாலோ என்னவோ துடைக்கும்போது இருக்கிற வாடைகூட பகலில் இல்லை.
துடைப்பதை விட்டுவிட்டால் எவ்வளவு நாள் தாங்கும் என்று தெரியவில்லை. விட்டுப் பார்த்தால்தான் தெரியும். துடைப்பது என்ன பெரிய வேலையா; ஆரோக்கியத்திற்குக் கொடுக்கும் சின்ன விலை என்று எண்ணி தினமும் வேப்பெண்ணெயால் சமையல் மேடையை, காஸ் அடுப்பின் அடியை என்று துடைத்துக்கொண்டு இருக்கிறோம்.
துடைத்து மிகும் நீரை ஸிங்க், ஸிங்க் பைப் போய் அடியில் இணையும் ஜல்லடை, யுடிலிடியில் இருக்கும் வாஷிங் மெஷினின் கழிவுக் குழாய் போய்ச்சேரும் சல்லடை, பாத்ரூம் ஜல்லடை என்று இருக்கிற ஓட்டைகளில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் போட்டுவிட்டுப் பின்னும் இருந்தால் செடிகளுக்கும் ஊற்றிக்கொண்டு இருக்கிறேன்.
யாம் பெற்ற விடிவைப் பெறுக இவ்வையகம்.