இவற்றில் முதல் தொகுதிக்கான அட்டை டிசைன், புத்தக வடிவமைப்பு, 252 பிரதிகளுக்கான (PODயில் காப்பி எண்ணிக்கை 4ல் இருக்கவேண்டும் என்பதால் கேட்ட 250, 252ஆக ஆகிவிட்டது) அச்சடிப்பு எனச் செலவிட்ட மொத்தப் பணத்தையும் முதல் தொகுதிக்கு முன்பதிவுத் திட்டத்தில் 124 நூல்களுக்கு நீங்கள் அனுப்பிய பணமே ஈடுகட்டி விட்டது.
விமலாதித்த மாமல்லன் கதைகளை 2017ல் சத்ரபதி பதிப்பகம் மூலமாக நானே வெளியிட்டபோது கிட்டத்தட்ட இதுவே நடந்தது. முன்பதிவிலேயே 99 பிரதிகள் பதிவாகின. கிழக்கு, கொரியர் அனுப்பும்போது 130 ஆகிவிட்டது.
காலச்சுவடு, 2017 டிசம்பரில் 300 காப்பி வெளியிட்ட புனைவு என்னும் புதிர், 2018 ஜனவரியில் நடந்த புத்தகக் காட்சியில் விற்றது 65. என்னிடம் பணம் செலுத்தி வாங்கிக்கொண்டோர் 165 பேர். மீதமிருந்த 70ல் பெரும்பான்மை இரண்டொரு மாதங்களில் என் மூலமாகவே விற்றுத் தீர்ந்தன. காலச்சுவடு, நூல் ஆசிரியருக்குத் தரும் 40% கழிவில், என்னிடம் வாங்கியோருக்குக் கொடுத்தும் எனக்கு நின்றதே - வருவதில் 15% என்று சொல்லி காலச்சுவடு தருகிற ராயல்டியைவிட அதிகம். (பதிப்பகத்துக்கு வரும் பணத்தில் ராயல்டி 15% என்று காலச்சுவடு காட்டுகிற கலர் பல்பு, எல்லோரும் கொடுக்கிற - MRPக்கு 10% - என்பதைவிடவும் குறைவு என்பதே நிஜம்).
என்னிடம் புத்தகம் வாங்குகிறவர்கள், வாங்குகிறவர்களாக மட்டுமின்றி வாங்கிக்கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இதில் முக்கியமான விஷயம், இரண்டாம் பேருக்குத் தெரியாமல் இதைச் செய்பவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான்.
ஒருவர் இரண்டு புத்தகங்களுக்குப் பணம் அனுப்பினார். ஒன்று எனக்கு என்று தன் முகவரியையும் இன்னொன்று எனச் சொல்லி ரோஜா முத்தையா நூலகத்தின் முகவரியையும் அனுப்பியிருந்தார். முதலில் அறிவித்த முதல் தொகுப்பிற்கு மட்டுமின்றி அடுத்து அறிவித்த உலகச் சிறுகதைகள் 2க்கும் அவர் இதையே செய்தார்.
இதை நான் இதுவரை வெளியில் சொல்லவில்லை.
இதற்கே நெகிழ்ந்துவிட்டால் எப்படி என்பதைப்போல மற்றொருவர், கோவிலில், கோத்திரம் பெயர் நட்சத்திரம் கேட்கிற அர்ச்சகரிடம், சுவாமி பேருக்கே பண்ணிடுங்க என்பதைப்போல, ஆறு செட்டுக்கு பணம் அனுப்பிவிட்டு, ஒன்று எனக்கு என்று முகவரியைக் கொடுத்துவிட்டு, மற்ற ஐந்து செட்களும் உங்களுக்குத் தோன்றுகிற நூலகங்களுக்கு அனுப்பிவிடுங்கள் என்றார்.
நீங்க எந்தப் புத்தகம் வெளியிட்டாலும் எனக்கு ஐம்பது காப்பி என்று சொல்லிவைத்திருக்கும் - நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் என் புத்தகங்களைப் பரிசாக அளிக்கும் அமீரகவாசி, இந்தமுறையும் 25 + 25 பிரதிகளுக்குப் பணம் அனுப்பிவிட்டார்.
இதெல்லாம் ஒரு விஷயமா. எனக்கு கார் வாங்கிக்கொடுப்பவர்கள் ஏரோப்பிளேன் வாங்கிக்கொடுப்பவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று எழுத்தாளர்கள் சொல்லிக்கொள்ளலாம். வாசிப்பு என்பதே அருகிவிட்ட நிலையில், எவரோடும் ஒத்துப்போகாத இந்த இலக்கியப் பெட்டிக்கடைக்காரனுக்குப் புத்தகம் வாங்க ஆளிருந்தாலே போதும் என்று நிறைவடைவதுதானே நியாயம். எழுதுகிறவனுக்கு வேறென்ன வேண்டும்.
சொறிந்துகொள்வதற்காக, சொறிந்துவிட்டு ஜால்ரா கும்பலைச் சேர்த்துக்கொண்டு இருப்பதல்ல, வேஷத்துக்கு மயங்காத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, நம் பெயர் சொல்லப்படவேண்டும் என்கிற சப்புக்கொட்டல்கூட இல்லாத இப்படியான நபர்களை நண்பர்களாக அடைவதுதான் எனக்கு முக்கியம்.
எச்சரிக்கை. எல்லோரும் எல்லோரையும் கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் - அணிந்திருக்கும் ஒப்பனைகளைத்தாண்டி. எனவே எவரைவிடவும் எழுத்தாளர்கள் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.
உள்ளதைச் சொல்லுகிறேன் - என்
08.01.2024.
விமலாதித்த மாமல்லன் கதைகள் ₹280
தவிப்பு (சிறுகதைகள்) ₹100
விளக்கும் வெளிச்சமும் (சிறுகதைகள், நெடுங்கதைகள், குறுநாவல்கள்) ₹180
எழுத்துக் கலை (கதைகளும் கட்டுரைகளும்) ₹150
புனைவு என்னும் புதிர் (கதைகளும் கட்டுரைகளும்) ₹150
ஷோபாசக்தியின் 12 கதைகள் (கதைகளும் கட்டுரைகளும்) ₹250
உலகச் சிறுகதைகள் 1 (கதைகளும் கட்டுரைகளும்) ₹250
உலகச் சிறுகதைகள் 2 (கதைகளும் கட்டுரைகளும்) ₹225
சின்மயி விவகாரம் (கட்டுரைகள்) ₹300
முகவரிக்கு வாட்ஸப்: 9551651212