04 April 2024

எல்லோரையும் பொருட்படுத்துவது நேர விரயம்

ஒரு சமயம் உங்கள் புனைவு என்னும் புதிர் நூல் குறித்த என் வாசிப்பு அனுபவத்தை எழுதியிருந்தேன்.

அதன் தலைப்பில் ஒரு பிழை உண்டு. (என்னும் - எனும்)

நீங்கள் கூட அதை கூகுள் + - ல் பகிர்ந்தீர்கள். ஆனால் பிழையின்றி நீங்கள் எழுதியிருத்தீர்கள். அப்போதே ஒரு குற்ற உணர்வு இருந்தது.

பிற்பாடு திருத்திக் கொண்டேன்.

மின்னல்  கதையை நான்  படித்த அன்றைய தினம் முழுதும் ஒரு உற்சாகம் உள்ளுக்குள் நிறைந்தபடி திரிந்தேன். அது ஒரு சிறந்த கதை. படித்தால் நம் முகத்தில் ஒரு புன்னகை மிஞ்சும் என்றாலும் உங்கள் குறிப்புகள் அதை அதிகரித்தன.

என் நண்பர் ஒருவர் உங்கள் நூல் குறித்த அவரின் கருத்தை எனக்குச் சொன்னார்.

கதைகளை நாமாகப் படித்து புரிந்துகொள்வதே சிறந்தது. இது போல் விளக்கவுரைகள் சரியான விதம் அல்ல.

ஒரு வகையில் இது சரி என்பதாக இருப்பதால்...

புனைவு என்னும் புதிர் வரிசை நூல்களை யார் வாசிக்கலாம்

 

 

இவை விளக்கவுரைகள் அல்லவே. உங்கள் நண்பர் படித்துவிட்டுச் சொன்னாரா படிக்காமலே சொன்னாரா.

நாமாகப் படிப்பது எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டு ரசிக்க இவற்றைப் படிக்கலாம். இவற்றைவிட இன்னும் மேலாக உங்களால் துய்க்க முடிந்தால். நீங்களே எழுதவும் செய்யலாம். 

எழுத கீபோர்டில் கைவைக்கும்போதுதான் பிடிபடும் அவரவர் போதாமை.

அவர் படிக்காமல் தான் சொன்னார். 

வாசிப்பு அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இது போன்ற குறிப்புகளால் அந்த அனுபவம் மாறிவிடும் என்பது அவர் தரப்பு

 

 

கண்டவனும் சொல்வதையெல்லாம் சொல்லி என் நேரத்தை ஏன் வீணடிகிறீர்கள். உங்களுக்கும் இதில் சம்மதமெனில் என் புத்தகங்களை இனி வாங்காதீர்கள். 

ஒருவகையில் உங்கள் நண்பர் சொல்லியது உங்களுக்கு சரியென்று பட்டபின் இவற்றை யார் வாசித்தால் என்ன வாசிக்காமல் போனால் என்ன. 

வண்ண நிலவன் எழுதிய மிருகம்’. கதை முதல் வாசிப்பில் வெறுமையாகத்தான் இருந்தது. அதற்கான விளக்கம் படித்ததும் அடுத்தடுத்த கதைகளை இன்னும் கூர்மையாக கவனித்துப் படிக்க வேண்டுமென தோன்றியது.

இத்தொகுப்பில் மௌனியின் கதை (மாறாட்டம்) இருப்பதிலேயே எனக்கு ஆச்சர்யமூட்டிய கதை. முதல் வாசிப்பில் எனக்கு முழுமையாக விளங்காமல் மீண்டுமொருமுறை சில பத்திகளை வாசித்து விளங்கிக் கொள்ள இயன்றது.

இது நான் எழுதி வைத்திருக்கும் அனுபவம். 

என் அளவில் அது மதிப்பான நூல். வாசிப்பு குறித்து உரையாடினால் நெருங்கிய நண்பர்களை ஒரேயடியாக எதிர்த்துப் பேசுவதில்லை. அதனால் தான் உங்களிடம் ஒரு கருத்துப்பகிர்வாகச் சொன்னேன். 

வேறொன்றுமில்லை.

 

 

எல்லாம் தெரிந்தவர்களாய் உருப்படாத கோவிலில் உண்டைக்கட்டி வாங்கித் தின்றுகொண்டு எதையும் தெரிந்துகொள்ள ஆர்வமின்றி இலக்கிய வாசிப்பின்றி வாய்க்கு வந்ததை அரிய தத்துவம் போல் உளறிக்கொண்டு இருப்பவர்களே இன்றைய இளைஞர்களில் ஏராளம். இவர்களின் அபிப்ராயத்துக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருப்பது நேர விரயம்.