28 July 2024

மொழியைப் பொங்கலாக்குதல்

//வாழ்வைப் புனைவாக்குதல் :

வாழ்க்கையின் அனுபவங்களை நேரடியாக அறிவதைக் காட்டிலும்,புனைவுகள் மூலம் அறிந்து கொள்வது அவற்றை மேலும் சுவாரஸ்யமானதாகவும்,செறிவானதாகவும் மாற்றுகிறது.ஒரு வாசகனின் மனதில்,அவற்றை அப்படி மாறுகையில் நிகழும்,ரசவாதமே அவற்றின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன.அது ஒரு X Factor எனலாம்.அப்படி வெற்றிபெற்ற அல்லது தோல்வி அடைந்த புனைவுகளைப் பற்றிய எழுத்துக்களே இவை..

நடந்து கொண்டிருக்கும்,கோவைப் புத்தகக் கண்காட்சியின் ஸ்டால் எண் 18,சிறுவாணி வாசகர் மையத்தின் அரங்கில் கிடைக்கும்..//


மொழி ஒருபக்கம் இருக்க, டைப்பிங்கிலேயே பிரச்சனை.


கமா, ஃபுல் ஸ்டாப்புக்குப் பிறகு ஸ்பேஸ் பாரைத் தட்டி இடைவெளி கொடுக்காத வரி, கண்னை உறுத்தும். டைப்படித்தே சர்வீசைக் கழித்துக்கொண்டிருக்கும் செண்ட்ரல் கவர்ன்மெண்ட் குமாஸ்தாவே இப்படி டைப்படிப்பதை எப்படி ஏற்பது.

தமிழ் டைப்பிங் பிரச்சனையாக இருக்கும்.


கமா முற்றுப்புள்ளி இடைவெளிகளை சரியாகப் பார்த்துத் தட்டச்சுவதில் தமிழென்ன இங்கிலீஷென்ன.


சோறு போடுகிற ஆபீஸ் டைப்பிங்கை இப்படி காமாசோமா என அடிக்கமுடியுமா. தமிழ்தானே என்கிற அலட்சியமின்றி இது வேறென்ன.


கட்டைவிரலில் அடிபட்டுக் கட்டுப் போட்டிருப்பாராயிருக்கும். ஒழியட்டும் என்று அதைக்கூட விட்டுவிடலாம். ஆனால் இவரது மொழிக்கோளாறுகள் அனைத்துக்குமான அடிப்படைக் காரணம், போதாமை. தயார்ப்படுத்திக்கொள்ள முனைப்பின்மை. எழுதுகிறவனுக்குத் தன் எழுத்துமேல் இருக்கவேண்டிய மரியாதை என்பது இங்கிருந்தே ஆரம்பிக்கவேண்டும் என்பதால் இதைச் சொல்லியே ஆகவேண்டியிருக்கிறது.


பரட்டைத் தலையுடன் கோரைப்புல் போன்ற மீசையுடன் பாதி சட்டை பேண்ட்டுக்குள்ளும் பாதி வெளியேயும் கிடக்க பெல்ட் இல்லாமல் டக் இன் செய்துகொண்டு புக்ஃபேரில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பாரா. தோற்றத்துக்கு செலுத்தும் அக்கறையில் கால்வாசி கூட எழுத்துக்குக் கொடுக்கமாட்டேன் என்றால் எப்படி. ஆள் பார்க்க டையடித்துக்கொண்டு யூத்தாகத் தெரியவேண்டும். எழுதுகிற மொழி எப்படி இருந்தால் என்ன என்பது, என்ன மாதிரியான மனப்பான்மை.


சரி மேட்டருக்கு வருவோம். வாராத முடியா படியாத மயிரா என்பதைப் பார்ப்போம்.


//வாழ்க்கையின் அனுபவங்களை நேரடியாக அறிவதைக் காட்டிலும்,புனைவுகள் மூலம் அறிந்து கொள்வது//


என்ன உளறல் இது.


அவரவர் வாழ்வில் கண்டவற்றோடு கதையில் காணக்கிடைக்கிற தருணங்களைத் தொடர்புப்படுத்தி, நமக்கு இப்படி நடந்ததை இவர் இப்படி எழுதியிருக்கிறாரா என ஒப்பிட்டுக்கொண்டு, அதை எப்படி இவரால் இவ்வளவு அழகாகச் சொல்லமுடிந்திருக்கிறது என்று வியந்து விகசிப்பதுதானே வாசிப்பு அனுபவம் என்பது. புனைவு என்கிற பெயரில் மனித வாழ்வைப் பிரதிபலிக்காத புருடாக்களைத்தான் இந்தக் காலத்து இளைஞர்களைப்போல அந்தக்கால மனிதரான இவரும் புனைவு புடலங்காய் என்று எண்ணிக்கொண்டிருக்கிறாரா.


//அவற்றை மேலும் சுவாரஸ்யமானதாகவும்,செறிவானதாகவும் மாற்றுகிறது.//


எவற்றை?


அவற்றை என்று ‘வாழ்க்கை அனுபவங்களை’த்தாமே குறிப்பிடுகிறார்.


//மேலும்//


என்பதற்கு என்ன பொருள். ‘இருப்பதைவிட அதிகமாக’ என்பதுதானே. சரி. இந்த வாக்கியத்தை எப்படி ஆரம்பிக்கிறார்.


//வாழ்க்கை அனுபவங்களை நேரடியாக அறிவதைக் காட்டிலும்//


எழுதுகிற புண்ணாக்கு என்று தன்னைச் சொல்லிக்கொள்கிற எதாவது இப்படியொரு வாக்கியத் துணுக்கை எழுதுமா. எழுதலாமா.


அனுபவம் என்பது என்ன. வாழ்வதே அனுபவம்தானே. சம்பவங்கள் நிகழ்வுகள் இல்லாமல் எவர் வாழ்வாவது உண்டா. வாழ்வில் ‘நடப்பவற்றில்’ அன்றாடங்களைத் தாண்டி, மனதில் நிற்கிற, பாதிக்கிற சம்பவங்களும் நிகழ்வுகளும்தாமே அனுபவங்களாகத் தங்கி நிற்கின்றன. பொதுமனிதனிடம் ‘அனுபவங்கள்’ அவனுடையதாக மட்டுமே நின்றுவிடுகின்றன. எழுத்தாளனிடம், பார்வை, கோணம், தனதை மற்றவனுடையதாகவும் அடுத்தவனைத் தானாகவும் பார்க்கிற வல்லமை என இன்னும் பல விஷயங்கள் இருப்பதால்தானே, அவனுடைய அனுபவம் படைகிறது. படைப்பு தருகிற அனுபவம், அவரவர் படிப்புக்கும் பயிற்சிக்கும் தரத்திற்கும் ஏற்ப வாசிப்பு அனுபவமாகப் பரிணமிக்கிறது.


நேரடியாகத் தன் வாழ்வில் நடந்ததையே அறியாதவனால் துய்க்கமுடியாதவனால் எப்படிக் கதையில் நடப்பதைத் தன் வாழ்வோடு இணைத்து சுவாரஸியமாகவும் செறிவாகவும் பார்க்கமுடியும்.


தன் வாழ்வில் நடந்த நல்லது கெட்டதை அசைபோடாதவனாக, மனிதனாகப் பிறந்த எவனாவது இருப்பானா. மனிதன் என்பவனே கடந்த கால நினைவுகளால் எதிர்காலம் பற்றிய எண்ணங்களாலும் ஆனவன்தானே. எழுத்து என்பது வெறும் அ ஆ இ ஈ இல்லை; எழுதுகிறவனின் சிந்தனை. எழுதுபவனின் மனம்.


என்ன எழுதுகிறோம் என்பதைத் தெரிந்து யோசித்து எழுதுகிறவனுக்குத்தானே அந்தக் கவலையெல்லாம். எட்டுவீட்டுப் பிச்சைக்காரனாகக் கண்டதையும் படித்து, செரிக்காமல் எடுத்துவைக்கிற வாந்தியாக எதைப் போட்டாலும் அதற்கும் லைக்போட்டு கமெண்ட்டில் வந்து கும்மியடிக்கக் கும்பமேளா கும்பல் இருக்கும்போது என்ன கவலை எடுத்துவை ஏழெட்டு வாந்தியை; இன்றைய தினத்தை ஏறக்கட்டு என்று போய்க்கொண்டிருக்கிற பேஸ்புக் வாழ்க்கைக்கு நிறம் சுவை திடமெல்லாம் எதற்கு.


எதுவுமே நடக்காத வாழ்வு என்று எவருக்காவது இருக்கமுடியுமா. தமக்கு நடந்ததைப் ‘பார்க்க’த் தெரியாத மனிதர்கள் இருக்கலாம் என்றால் அதுகூட, பேசுகிற மனித உயிருக்கு சாத்தியமில்லை இல்லையா.


அடுத்தவருடன் பேசாமல் இருக்கிற மனிதர்கள் அபூர்வம். பேசும்போதே தன் பேச்சை அடுத்தவன் கேட்கவேண்டும் என்கிற ஆவல் அனிச்சையாக வந்துவிடுகிறது. அதற்காகவே சொல்வதை சுவாரசியமாகச் சொல்லியாகவேண்டியிருக்கிறது. சுவைக்காகக் கொஞ்சமாகப் பொய்யைத் தொட்டுக்கொள்ளத் தொடங்குகிற சாதாரண மனிதன், நடந்ததைக் கொஞ்சம் மிகைப்படுத்திச் சொல்ல ஆரம்பித்துக் கேட்பவன் வசப்பட்டதைப் பார்ப்பதில் உண்டாகும் போதையில், பின்னும் சுவாரசியத்துக்காக நடக்காத பொய்யையும் கலந்துகொள்ளத் தொடங்குகிறான்.


சாதாரணர்களின் அன்றாடப் பேச்சில் நடக்கிற இதேதான் எழுத்தாளனுக்குள்ளும் நடக்கிறது எண்ணங்களாய்; இன்னும் கொஞ்சம் வேறு தளத்தில் - அவனவன் தரத்திற்கேற்ப உயர்ந்தும் தாழ்ந்தும். மனத்தின் எண்ண ஓட்டங்களே எழுத்தாக வெளிப்படுகின்றன.


இது, சிந்தனைத் தளமே இல்லாத காலி கொப்பரை மூடியாக இருந்தாலும் போகிறது, வாங்கி வந்ததே அவ்வளவுதான் என்று விட்டுவிடலாம் என்றால் 60ஐ எட்டிக்கொண்டிருக்கும் வயதிலும் அடிப்படை வாக்கிய அமைப்பே கைவரவில்லை என்பதை எப்படி ஜீரணித்துக்கொள்வது.


//ஒரு வாசகனின் மனதில்,அவற்றை அப்படி மாறுகையில் நிகழும்,ரசவாதமே அவற்றின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன.//


என்ன எழவு இது. இதற்குப்பெயர் வாக்கியமா.


இதற்கு முந்தைய வாக்கியம் என்னவென்று முடிந்தது.


//மாற்றுகிறது.//


என்று முடிகிற சொற்றொடரை அடுத்து வருகிற, அந்தப் பொருளைப் பற்றியே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிற சென்ட்டன்ஸில்


//அவற்றை அப்படி மாற்றுகையில் நிகழும் ரசவாதமே// என்றல்லவா வரவேண்டும்.

சென்ற வாக்கியம் /மாறுகிறது/ என்று முடிந்திருந்தால்தானே அதன் தொடர்ச்சியாக /மாறுகையில்/ என்று வருவது பொருத்தமாக இருக்கும். /மாறுகையில்/ என்கிற வார்த்தை குலதெய்வத்திற்கு நேர்ந்துகொண்டது. அது இருந்தே ஆகவேண்டும் என்றால் அதற்கு முன்னால் வருகிற /அவற்றை/க்குப் பதிலாக /’அவை’ என்றும் /அப்படி மாறுகையில்/ என்றுமாவது மாற்றிப் போட்டுத் தொலைக்கவேண்டாமா.


சென்றது ‘வாக்கியக் கோளாறு’ என்றால் இதைத் ‘திருக்கணிதக் கோளாறு’ என்றுதான் சொல்லவேண்டும்.


//ஒரு வாசகனின் மனதில்,அவற்றை அப்படி மாறுகையில் நிகழும்,ரசவாதமே அவற்றின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன.//


இந்த சொல்தொடரில் எது எழுவாய். எழுவாய் என்றால் என்னவென்று தெரியவில்லையா. சரி புரியும்படி தற்காலத் தமிழில் சொல்வதானால் எது சப்ஜெக்ட்.


‘ரசவாதமே’வா

‘அவற்றின்’னா.


இதைத் தவறாகத் தீர்மானிக்கிற மொழிப் போதாமையே ‘நிர்ணயிக்கிறது’ என ஒருமையில் முடிக்கவேண்டிய வாக்கியத்தைக் கோளாறாக /நிர்ணயிக்கின்றன./ என்று எழுதவைக்கிறது.


ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதிய நான்கு வரிகளிலேயே இவ்வளவுக் கோளாறுகள் இருக்குமானால் ஒன்பது புத்தகங்களில் எவ்வளவு இருக்கும் என்பதை இதைப் படிப்போரே அனுமானித்துக்கொள்ளவும்.


ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதை எடுத்துக்காட்ட - அறுபது வயது ஆகப்போகிறபோதும் ஒரு வாக்கியத்தைக்கூட ஒழுங்காக எழுதத்தெரியாத, ஜெயமோக இலக்கியம், கிரிக்கெட், பழைய சினிமா, சாப்பாட்டுக்கடை, ஆன்மீக உலா, ‘மாமா டைப்’ அரசியல் அலசல் என்று கலந்துகட்டி எழுதித்தள்ளும் இந்த பேஸ்புக் பிரபலம் ஒன்றே போதும்.


தினமும் எழுதினால் எழுத்து வரும் என்று எவன் சொன்னான்.


மனம் தோய, மூளை விழிப்புடன் இருக்க, கோர்வையாக சிந்திக்க முடிகிறவனுக்கு எப்போது எழுதினாலும் எழுத்து வரும். எப்போதாவது எழுதினாலும் ‘வா’ என்று சொன்னமாத்திரத்தில் எழுத்து எழுந்து வந்து மண்டியிட்டு நிற்கும்.


28.07.2024.