''அப்போதுதான் உழுதுபோட்டிருந்த கரிசல் வயல்வெளிக்குக் குறுக்காகத்தான் வீட்டுக்குப் போகும் வழி.புழுதி படர்ந்த அந்த வழியாக நடந்தேன். உழவு முடிந்த அந்த வயல் ஒரு பெரிய நிலவுடைமையாளனுடையது.பாதையின் இருபுறமாகவும் எனக்கு முன்னால் தெரியும் குன்றின் அடிவாரத்திலுமாகவும் வயல் விரிந்து கிடந்தது. சீரான உழவு சால்களையும் சதுப்பான மண்ணையும் தவிர வேறு எதுவும் தென்படவில்லை.ஆழமாக உழவு செய்யப்பட்டிருந்ததனால் மண்ணில் புல்லையோ வேறு செடிகளையோ பார்க்க முடியவில்லை. எல்லாம் கறுப்பாக இருந்தது. உயிரற்ற அந்தக் கரிய பூமியில் உயிருள்ள ஏதாவது தென்படுமா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே ' மனிதன்தான் எத்தனை நாசக்காரன். தன்னுடைய இருப்புக்காக உயிருள்ள வெவ்வேறான எத்தனை தாவரங்களை அழிக்கிறான்?' என்று யோசித்தேன். எனக்கு முன்னால் பாதையின் வலது பக்கத்தில் சின்னப் புதர் தெரிந்தது. நெருங்கிப் பார்த்தபோது சற்று முன்பு, நான் அநாவசியமாகப் பறித்து வீசியெறிந்த நெருஞ்சி என்று தெரிந்தது. அந்தத் 'தார்த்தாரிய' தாவரத்துக்கு மூன்று கிளைகள் இருந்தன. ஒரு கிளை உடைந்து வெட்டப்பட்ட கை போல ஒட்டிக்கொண்டிருந்தது. மற்ற இரு கிளைகளிலும் பூக்கள் இருந்தன.அவை முன்பு சிவப்பாக இருந்து இப்போது கருமையேறியிருந்தன. ஒரு தண்டு ஒடிந்திருந்தது. மறு பாதி நுனியில் அழுக்குப் புரண்ட பூவுடன் தொங்கிக் கொண்டிருந்தது. அடுத்த பூவும் கறுப்புச் சேறு படிந்து இருந்தாலும் நிமிர்ந்து நின்றிருந்தது. ஏதோ வண்டிச் சக்கரம் அந்தச் செடியின் மேல் உருண்டு போயிருக்க வேண்டும். ஆனாலும் செடி மறுபடியும் நிமிர்ந்து எழுந்திருக்கிறது. அதனால்தான் விறைப்பாக நின்றாலும், உடலின் ஒரு பகுதி பிய்த்து எடுக்கப் பட்டதுபோலவோ, குடல்கள் உருவப்பட்டது போலவோ, ஒரு கை முறிக்கப்பட்டதுபோலவோ, கண்கள் பிடுங்கப்பட்டதுபோலவோ அது ஒரு பக்கமாகத் திருகியிருந்தது. எனினும் தன்னுடைய சகோதரர்களை அழித்த மனிதனுக்கு அடிபணியாமல் நிமிர்ந்து நின்றது.