ஆன்லைன் விளையாட்டுக்களை ஆடிக்கொண்டிருந்த எதிர் வீட்டுக் குட்டிப்பையன் திடீரென காண்ட்-கண்ட், தெர்தா-சர்தா, ஃபூக்கோ-பூக்கோ என தொடர்ந்து கத்தத்தொடங்கிவிட்டான். அந்த வீட்டுக்காரர்கள் என்னமோ ஏதோ என அரண்டுபோயினர். குடும்ப கெளரவத்துக்கு பங்கம் வந்துவிடாத வண்ணம், கமுக்கமாய் அம்மன் கோவில் பூசாரி முதல் 24மணிநேர கிளினிக்கின் ஈயோட்டி மருத்துவர் வரை எல்லோரையும் முயற்சித்துப் பார்த்தனர். ஏது செய்தும் அவன் கத்தலை நிறுத்த முடியாமல் போகவே, இதுபோன்ற கிறுக்கிருக்கும் வீடு என நினைத்தனரோ என்னவோ தம் கவலையை மெல்ல என் மனைவியிடம் பகிர்ந்துகொண்டனர்.