பூக்கடை அருகில் வண்டியை விட இடம் கிடைக்க ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவாய் அமைந்திருக்க வேண்டும். அடுத்த ஜென்மத்தில்கூட அதற்கான வாய்ப்பு அபூர்வம் என்பதால் எப்போதுமே எனக்கு இடம் கிடைக்காது. போதாக்குறைக்குக் கண் எதிரிலேயே, பைக்குகள் வேன் சவாரிக்கு முரட்டுத் தனமாய் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன. தண்டம் செலுத்தி மீட்கபட்டாலும் பைக்குளின் கழுத்துச் சுளுக்கெடுக்க மெக்கானிக்கைத் தேட வேண்டி இருக்கும். கருக்கத் தொடங்கியிருந்த அந்த மாலையில் கண்ணுக்கெட்டிய நூறடி தூரத்தில் பஞ்சர் கடைகூடத் தட்டுப்படவில்லை. திடீரெனத் தோன்றிற்று, அரசு வேலையாய் வந்திருக்கையில் அரசுக் கட்டிடத்தில் வண்டியை விடுவதில் அப்படி என்ன தவறு இருக்கமுடியும் என்று. பொய் சொல்லப்போவதில்லை - எப்படியும் அதை, போகிற இடத்தில் மூட்டை மூட்டையாய் அவிழ்த்து விடுவதுதான் வேலையே, எனவே இங்கே உண்மையைச் சொல்லி இடம் கேட்டால் என்ன.